2017-09-07 15:48:00

கர்தினால் கார்லோ கஃப்பார்ரா இறையடி சேர்ந்தார்


செப்.07,2017. இத்தாலியின் பொலோஞா (Bologna) உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான கர்தினால் கார்லோ கஃப்பார்ரா (Carlo Caffarra) அவர்கள், செப்டம்பர் 6, இப்புதனன்று தன் 79வது வயதில் இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ளார்.

கர்தினால் கஃப்பார்ரா அவர்களின் அடக்கத் திருப்பலி, செப்டம்பர் 9, இச்சனிக்கிழமை 11 மணிக்கு, பொலோஞா பேராயர் மத்தேயோ சுப்பி (Matteo Zuppi) அவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும், அவரது உடல், பேராலயத்தில் அமைந்துள்ள கல்லறையில் புதைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1938ம் ஆண்டு, இத்தாலியின் Samboseto di Busseto எனுமிடத்தில் பிறந்த கார்லோ அவர்கள், 1961ம் ஆண்டு குருவாகவும், 1995ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற கார்லோ அவர்கள், 2003ம் ஆண்டு பொலோஞா உயர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றபின், 2006ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கூடிய, கான்கிளேவ், 2014ம் ஆண்டும், 2015ம் ஆண்டும் வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றங்களில் ஆகியவற்றில், கர்தினால் கஃப்பார்ரா அவர்கள் பங்கேற்றார்.

கர்தினால் அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை, 221 என்பதும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை 120 என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.