2017-09-06 16:12:00

திருத்தந்தையை வரவேற்க மியான்மார் ஆவலோடு காத்திருக்கிறது


செப்.06,2017. மியான்மாரில் வாழும் கத்தோலிக்கர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று அந்நாட்டின் ஆயர் அலெக்சாண்டர்  பியோனே சோ (Alexander Pyone Cho) அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

மேற்கு மியான்மாரில் நிலவிவரும் பதட்ட நிலைகளையும் தாண்டி, திருத்தந்தையின் வரவை தங்கள் நாடு ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாக, Pyay மறைமாவட்டத்தின் ஆயர் சோ அவர்கள் கூறினார்.

நவம்பர் 27 முதல் 30 வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மாரின் Yangon, Nay Pyi Taw ஆகிய நகரங்களில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில் எவ்வித இடையூறும் இராது என்று ஆயர் சோ அவர்கள் உறுதியளித்தார்.

இவ்வாண்டு மேமாதம் 4ம் தேதி வத்திக்கானுக்கும், மியான்மார் நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட முழு தூதரக உறவைத் தொடர்ந்து, அதே ஆண்டில் நடைபெறும் இந்தக் திருத்தூதுப்பயணம், இங்கு வாழும் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்லாமல், அமைதியை விரும்பும் அனைவருக்கும் ஆறுதலான ஒரு செய்தி என்று ஆயர் சோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.