2017-09-06 16:04:00

ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகளில், இளையோர்


செப்.06,2017. இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகளில், இளையோரை இன்னும் அதிகமாக ஈடுபடுத்தும் முயற்சிகளை, மாமன்ற அலுவலகம் மேற்கொண்டு வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"இளையோர், நம்பிக்கை, அழைத்தலைத் தெளிதல்" என்ற தலைப்பில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புகள் குறித்து, மாமன்ற தலைமைச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி (Lorenzo Baldisseri) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இளையோரிடையே ஊடக வடிவங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருவதை மனதில் கொண்டு, youth.synod2018.va என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிய கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், மாமன்ற துவக்கநிலை ஏட்டினை தயாரிக்க, பல்லாயிரம் இளையோரின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

நடைபெறவிருக்கும் மாமன்றம், ஆயர்களின் முதன்மையான பங்கேற்பை பெற்றிருக்கும் என்றாலும், இந்த மாமன்றத்தில் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் இளையோர், மாமன்றத்திற்கு வெளியே நிகழும் பல்வேறு குழு பரிமாற்றங்களில் முழுமையாகப் பங்கேற்பர் என்று கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள் விளக்கிக் கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்னேற்பாடாக, செப்டம்பர் 11 முதல் 15 முடிய இயேசு சபை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது அவை அரங்கத்தில், பன்னாட்டு இளையோரின் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.