2017-09-06 15:32:00

பாசமுள்ள பார்வையில்..... வீண் கவலை எதற்கு?


இரண்டு நாட்களில் பள்ளி திறக்க இருந்ததால், அந்த ஊரின் ஆண்கள் அனைவரும் அந்த பள்ளி வளாகத்தினுள் வளர்ந்திருந்த புதர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். விடுமுறையில் இருந்த குழந்தைகள் சிலர், அங்கு விளையாடிக்கொண்டும் இருந்தனர். புதரிலிருந்து தப்பியோட முயன்ற கொடிய விடமுடைய பாம்பு ஒன்று, சிறுவன் முகிலன் அருகே வந்தது. நெளிந்து வளைந்து ஓடிய அந்த பாம்பினால் வரும் ஆபத்தை அறியாமல், அதனை கைகளால் இறுக்கமாகப் பிடித்தான் அச்சிறுவன். கழுத்தை கைகளுக்குள் இறுக்கப் பிடித்துக் கொண்டு, தன் தந்தையிடம் பெருமையாகக் காண்பித்தான் முகிலன். 'ஐயோ' என அலறிய தந்தை, என்ன செய்வது எனத் தெரியாமல் திணறினார். ஏனெனில், சிறுவனின் கைகளை ஏற்கனவே அந்த பாம்பு, தன் உடலால் சுற்றியிருந்தது. அங்கிருந்தோர் அனைவரும், ஆளுக்கொரு யோசனை கூறினார்கள். பாம்பின் கழுத்தை சிறுவன் சிறிதளவு தளர்த்தினாலும் அது அவனை கொத்திவிடும் நிலையிலிருந்தது. அந்த ஊர் மக்கள் அனவரும் அவனைச் சுற்றி அமர்ந்து, என்ன செய்வதென விவாதித்துக் கொண்டிருந்தனர். சில மணி நேரங்கள் இப்படியே நகர்ந்தது. அப்போது அங்கு வந்த அந்த ஊர் வயதான பாட்டி, அந்த சிறுவனை அணுகி, அந்த பாம்பை கையில் வாங்கி கீழே போட்டார். அது ஏற்கனவே செத்துப்போயிருந்தது. 'சிறுவனின் இறுக்கமான பிடியில் ஒரு மணி நேரத்திலேயே இறந்துபோன இந்த பாம்பை வைத்துக்கொண்டு, சிறுவனையும் பயமுறுத்தி, நீங்களும் பயந்துகொண்டு சில மணி நேரங்களை வீணடித்திருக்கிறீர்கள். இப்படித்தான், உயிரே இல்லாத விடயங்களை மனதிற்குள் போட்டு குழப்பி, மகிழ்ச்சியை சாகடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  வீண் கவலைகளை அகற்றி, மகிழ்ச்சியை பகிருங்கள்' என்று அறிவுரை கூறினார் அந்த பாட்டி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.