2017-09-06 15:36:00

திருத்தந்தை: நாம் அனைவரும் இவ்வுலகில் விருந்தினரே


செப்.06,2017. நாம் அனைவரும் இவ்வுலகில் விருந்தினரே; நமது இவ்வுலகப் பயணம் நிறைவடைந்ததும், விண்ணகத்தில், உரிமைக் குடிமக்களாக வாழச்செல்வோம் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு வாழ்த்துச் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

இத்தாலியின் வட பகுதியில், ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 'போஸே' துறவு மடத்தில், செப்டம்பர் 6 இப்புதன் முதல், 9, இச்சனிக்கிழமை முடிய நடைபெறும் 25வது அகில உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையினருடன் இணைந்து நடத்தப்படும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, "விருந்தோம்பல் என்ற கொடை" என்பது, மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதற்கு, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

போஸே துறவு மடத்தின் தலைவர், சகோதரர் என்ஸோ பியாங்கி (Enzo Bianchi) அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியின் ஆரம்பத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு தன் சிறப்பான வணக்கங்களைத் தெரிவித்துள்ளார்.

இவ்வுலகில் விருந்தினர்களாக வாழும் நாம் அனைவரும், விண்ணகத்தை நோக்கி நம் பார்வையைப் பதித்து மேற்கொள்ளும் இவ்வுலகப் பயணத்தில், நம்முடன் பயணிக்கும் ஏழை, எளியோரையும், துன்புறுவோரையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.