2017-09-06 16:04:00

அணு ஆயுதப் போரில் வெல்பவர் யாரும் இருக்கமுடியாது


செப்.06,2017. அணு ஆயுதப் போர் நிகழ்வதை, அனைவரும் ஒன்றிணைந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, தென் கொரியாவின் Daejeon ஆயர், Lazarus You Heung-sik அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் ஆணு ஆயுத பரிட்சை ஆகிய முயற்சிகளைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள், அச்சுறுத்தும்வண்ணம் விடுத்துவரும் செய்திகளையடுத்து, தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Heung-sik அவர்கள், இந்த விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

அணு ஆயுதப் போர் என்று ஒன்று நிகழ்ந்தால், அதன் இறுதியில், வெல்பவர் யாரும் இருக்கமுடியாது என்றும், அனைவரும் அழிவது மட்டுமே உறுதி என்றும், ஆயர் Heung-sik அவர்கள் கவலையை வெளியிட்டார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும், பேச்சு வார்த்தைகள் என்ற கதவு எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை, உலகத் தலைவர்கள் உணர்வதற்கு, மக்கள் தொடர்ந்து செபிக்கவேண்டும் என்று, ஆயர் Heung-sik அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.  

செப்டம்பர் 6, 7 ஆகிய இருநாள்கள், இரஷ்யாவின் Vladivostok நகரில் நடைபெறும் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருக்கும் தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்களும், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்களும் மேற்கொள்ளும் சந்திப்பு, இந்தப் பதட்ட நிலைக்கு தீர்வைக் கொணரும் என்று தான் நம்புவதாக, ஆயர் Heung-sik அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.