2017-09-05 15:18:00

அன்பு, வாழ்வுக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் திருத்தலம்


செப்.05,2017. அன்னை தெரேசா இறையடி சேர்ந்ததன் 20ம் ஆண்டு, மற்றும், புனிதராக அறிவிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு ஆகியவற்றை நினைவுகூரும் விதமாக, இச்செவ்வாய்க்கிழமையன்று, கோசொவோ நாட்டில் உள்ள பிரிஸ்டினா நகரில்,  புனித அன்னை தெரேசா திருத்தலம் திருநிலைப்படுத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனிய மக்களால் துவக்கப்பட்ட இரு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இந்த கோவில் திருநிலைப்பாட்டுக் கொண்டாட்டத்தில், ,திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் எர்னஸ்ட் சிமோனி அவர்கள் கலந்துகொண்டார்.

கோசொவோ பகுதியின் முதல் மறைசாட்சிகளான இரண்டாம் நூற்றாண்டு இரட்டை சகோதரர்கள், ஃபுளோரஸ் மற்றும் லௌரஸ் ஆகியோரின் மறைசாட்சிய இடத்தருகே முன்னாள் அரசுத்தலைவர் Ibrahim Rugova அவர்களால் வழங்கப்பட்ட நிலத்தில், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம்தேதியே, அப்போதைய ஆயர் Mark Sopi அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளபோதிலும், 2006ம் ஆண்டு ஜனவரி மாதம், அரசுத்தலைவரும் ஆயரும் அடுத்தடுத்து மரணமடைய, கட்டுமானப்பணிகள் காலதாமதத்தை எதிர்கொண்டன. அன்னை தெரேசாவின் பெயரால் இச்செவ்வாய்க்கிழமையன்று திறக்கப்பட்டுள்ள இத்திருத்தலத்தின் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே, 2010ம் ஆண்டு, அன்னை தெரேசாவின் நூறாமாண்டு பிறப்புக் கொண்டாட்டம்,  இக்கோவிலினுள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இத்திருத்தலம் பற்றிக் குறிப்பிட்ட பிரிஸ்டினா மறைமாவட்ட முதன்மைக்குரு Lourdes Gjergji அவர்கள், அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டின் துணையுடன், அன்பு மற்றும் வாழ்வுக் கலாச்சாரத்தை கற்று நடைமுறைப்படுத்தும் ஆவலை வெளிப்படுத்துவதாக  இந்த திருத்தலம்  உள்ளது என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.