2017-09-05 15:06:00

பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையில் கவனம் செலுத்த....


செப்.06,2017. நவீன சமுதாயத்தில் நிலவுகின்ற தன்னலப் போக்குகளிலிருந்து விடுபட்டு, பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையில் கவனம் செலுத்துமாறு, பன்னாட்டு இளையோரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் வாழ்கின்ற கலாச்சாரம், மிகவும் தன்னலமுள்ளதாய், எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டு, பிறரைப் புறக்கணிப்பதாக உள்ளது எனவும் கூறியத்  திருத்தந்தை, தன்னையே அன்புகூருகின்ற போக்கு, சோகத்தையே உருவாக்கும் எனவும் கூறினார்.

கத்தோலிக்க ஷலோம் குழுமத்தைச் சார்ந்த இளையோர் மற்றும், குடும்பங்கள் என, ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்திங்களன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழுமத்தின் மூன்று இளையோர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

சிலே நாட்டைச் சேர்ந்த ஹூவான் என்பவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை, இறைஇரக்கத்தின் நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு, ஒருவர், தன்னலம் துறக்கவேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.

மேலும், திருஅவையின் பணியிலும் வாழ்விலும் இளையோரின் பங்கு பற்றி, பிரான்ஸ் நாட்டு ஓர் இளம்பெண்ணும், போதைப்பொருளுக்கு பல ஆண்டுகள் அடிமையாகி தற்போது புதுவாழ்வு வாழ்கின்ற பிரேசில் நாட்டு இளைஞர் ஒருவரும் திருத்தந்தையிடம் கேள்விகளைக் கேட்டனர்.

போதைப்பொருள்கள் மக்களின் வாழ்வை எவ்வாறு அழிக்கின்றன என்பதை விளக்கிய திருத்தந்தை, வயது முதிர்ந்தவர்களை மதித்து நடக்குமாறும் அறிவுறுத்தினார்.

பிரேசில் நாட்டின் வட கிழக்கிலுள்ள Fortaleza நகரில், 1980களின் ஆரம்பத்தில் ஷலோம் குழுமம் தொடங்கப்பட்டது. தற்போது பல நாடுகளில் பரவியுள்ள இக்குழுமத்தில், ஏறத்தாழ 3,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தியானம், ஒன்றிப்பு, மற்றும், நற்செய்தி அறிவிப்பில், இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.