2017-09-05 15:38:00

கொத்துவெடி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாடுகளுக்கு அழைப்பு


செப்.05,2017. கொத்து வெடிகுண்டுகளின் பயன்பாட்டைத் தடை செய்வதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியை வெளியிடும் அதேவேளை, இன்னும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து திருப்பீடத்தின் கவலையை ஐ.நா. அவையில் தெரிவித்தார், பேராயர் இவான் யுர்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு திருப்பீடப் பிரதிநிதியாகச் செயலாற்றும் பேராயர் யுர்கோவிச் அவர்கள், கொத்துவெடிகள் தடை ஒப்பந்தம் குறித்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாடும் அதேவேளை, சில மோதல்களில் இது தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதும், அதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதும் கவலை தருவதாக உள்ளது என்றார்.

இந்த தாக்குதல்களால் பாதிக்கப்படும் மக்களின் மாண்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, இந்தத் தடை ஒப்பந்தத்தின் விதிகள், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட வலியுறுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர் யுர்கோவிச்.

கொத்து வெடிகுண்டுகளின் பயன்பாட்டைத் தடைச்செய்யும் ஒப்பந்தத்தை அகில உலக அளவில் பின்பற்றுவது, ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும் என்பதை வலியுறுத்திய திருப்பீட அதிகாரி, பேராயர் யுர்கோவிச் அவர்கள், அகில உலக அளவில் மனித உரிமைகள் அனுபவிக்கப்படுவதிலும் நல்ல பாதிப்புகள் இடம்பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

கொத்துவெடிகள் தடை ஒப்பந்தத்தில் இணையாத நாடுகள் அதில் இணைந்து, மக்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு உறுதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என திருப்பீடம் மீண்டும் ஒருமுறை விண்ணப்பிப்பதாக தன் உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார், பேராயர் யுர்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.