2017-09-05 15:14:00

குடிமக்களின் பங்கேற்பே சனநாயகத்தைக் காக்கும்


செப்.05,2017.  நாட்டின் அரசியல் பாதையில் ஒரு செயலூக்கமுடைய வழியைத் தேர்வு செய்யுமாறு, ஜெர்மன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.

இம்மாதம் 24ம் தேதி ஜெர்மன் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதையொட்டி, மக்களின் வாக்களிக்கும் கடமை பற்றி தங்கள் கூட்டறிக்கையில் அழைப்பு விடுத்துள்ள இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ அவையின் தலைவர், ஆயர் Heinrich Bedford-Strohm, கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Reinhard Marx ஆகியோர், குடிமக்களின் பங்கேற்புடனேயே சனநாயகம் வாழமுடியும் என்பதை அறிந்துள்ள ஜெர்மன் மக்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமையை நன்முறையில் பயன்படுத்த வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

எவ்வளவுக்கு மக்கள் அதிக அளவில் தேர்தல் வாக்களிப்பில் பங்குபெறுகிறார்களோ, அந்த அளவுக்கு, தலைவர்களின் பொறுப்புணர்வும் அதிகரிக்கும் எனவும், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், ஜெர்மன் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.

ஜெர்மனியில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள தலைவர்களுக்கு இருக்கவேண்டிய முக்கிய குணங்களாக மூன்றைக் குறிப்பிட்டுள்ள இக்கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அமைதியான வழிகளில் மற்றவர்களை மதித்து, அவர்களுக்குச் செவிமடுக்கத் தயாராக இருத்தல், எவ்விதப் பாகுபாடுமின்றி ஏழைகளுக்கும் துயருறுவோர்க்கும் உதவ வேண்டிய கடமையை உணர்தல், தேசியவாதங்களுக்கு அடிமையாகாமல் ஐரோப்பிய ஒன்றிப்பைக் கட்டிக்காத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.