2017-09-04 15:50:00

வாரம் ஓர் அலசல் – ஏற்றிவிட்ட ஏணிப்படிகள்


செப்.04,2017. இந்தியா, இந்தியர்கள் என கூகுள் வலைத்தளத்தைத் தட்டினால், பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த ஆர்யபட்டா (ARYABHATTA) ஓர் இந்தியர். எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள். உலகம் போற்றும் கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜம் ஒரு தமிழர். கணிதத்ததில் அல்ஜீப்ராவையும்  (ALGEBRA), நுண் கணிதத்ததையும் (CALCULUS), திரிகோணமிதியையும் (TRIGNOMETRY) உருவாக்கியவர்கள் இந்தியர்கள். சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மருத்துவர்களில் 33 விழுக்காட்டினர் இந்தியர்கள். அந்நாட்டிலுள்ள அறிவியலாளர்களில் 12 விழுக்காட்டினர் இந்தியர்கள். உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23 விழுக்காட்டினர் இந்தியர்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டு விண்வெளித்துறையான நாசா (NASA)வில் பணிபுரிபவர்களில் 36 விழுக்காட்டினர் இந்தியர்கள். உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17 விழுக்காட்டினர் இந்தியர்கள். உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34 விழுக்காட்டினர் இந்தியர்கள். ஹாட் மெயிலை (HOT MAIL) உருவாக்கியவரும், நிறுவியவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஓர் இந்தியர். இவ்வாறு இந்தியர்கள், உலகில் பல நாடுகளில் பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கின்றார்கள் என்று பெருமிதம் அடைகின்றோம். அதேநேரம், இவர்கள் எல்லாம் இந்த நிலைகளை எட்டுவதற்கு அடித்தளமிட்டவர்கள், தொடர்ந்து ஊக்கமளித்தவர்கள் யார் யார் என்பதையும் நினைத்துப் பார்க்கின்றோம். முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள், எனது வெற்றிக்கும் புகழுக்கும் ஆசிரியர்களே காரணம் என்று சொன்னார். எழுத்து.காம் என்ற இணையத்தில் ஒருவர், தனது ஆசிரியரை, என் குரு என வாழ்த்தி, கவிதை ஒன்றை வடித்துள்ளார்.

அடுக்களையில், அடுப்பு கரியில், மளிகை கணக்கும், பால் கணக்கும், எழுதியவளுக்கு....

கரும்பலகையை அறிமுகப்படுத்தி - அதில்

அல்ஜீப்ராவும், ஆத்திசூடியும் கற்றுகொடுத்த ஆசானுக்கு நன்றி!

அலறி விழுந்த என் தோழியை, அழகாய் அள்ளி அரவணைத்து - நீ

அன்பு முத்தமிட்டபோது, என் மெய் சிலிர்த்தது – உன் தாய்மை கண்டு ...

ஊழல் ஒழிக்க போராடும் – உன் வீரத்தை வீட்டில் சொல்லும்போது,

என் தலை நிமிர்ந்தது – நானும் உன் மாணவி என்று...

அறிவளித்த அன்னை உனை, அரவணைக்க ஆசைப்படுகிறேன் - அன்பாய்....

கல்வியுடன், கலைகளையும் கற்றேன் - கனிவாய்...

கல்வியின்மை எனும் களை எடுப்பேன் - துணிவாய்...

எனை வடிவமைத்த – உமக்கு தலை வணங்குகிறேன் - பணிவாய்...

செப்டம்பர் 05, இச்செவ்வாய் இந்திய ஆசிரியர் தினம். இந்த நல்ல நாளில், அனைத்து நல்லாசிரியர் பெருமக்களுக்கும், சிறப்பாக, எம் நேயர் குடும்ப ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள். பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, இந்தியாவின் உயர் பதவியான குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள்,  திருத்தணி அருகே, சர்வபள்ளி என்ற ஊரில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் பிறந்தார். இவர் தம் பேச்சாற்றலால் உலகம் முழுவதும் தன் குரலை எதிரொலிக்கச் செய்தவர். இவருக்கு படிப்பது என்பது ஒரு சுகம். இவரின் படிப்புக்கும், திறமைக்கும், தகுதிக்கும்மேல் வேலைவாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. எம்.ஏ.பட்டம் பெற்றவுடன், முதலில் சென்னை மாகாணக் கல்லூரியில் மெய்யியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், பிறகு, மைசூர் பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு இவர், 1931ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டுவரை ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றினார். இவர் பெயர் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 1936ம் ஆண்டு, இவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து, கீழை நாட்டு சமயப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு வந்தது. இந்தப் பொறுப்பான பணியை ஏற்ற முதல் இந்தியர்  இராதாகிருஷ்ணன் அவர்கள். தர்க்கம் செய்வதிலும், எதிரில் நின்று பேசுபவர்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதிலும் இராதாகிருஷ்ணன் சளைக்க மாட்டார்.

ஒருமுறை இராதாகிருஷ்ணன் அவர்கள், வெள்ளைக்கார ஆளுனர் தந்த விருந்தில் கலந்துகொண்டார். அப்போது ஓர் ஆங்கிலேயர், “நாங்கள் எல்லாம் ஒரே நிறம். ஆனால், இந்தியர்கள் பல நிறங்கள். இதிலிருந்தே தெரியவில்லையா நாங்கள் உயர்ந்தவர்கள் என்று”என இகழ்ந்து பேசினார். அதற்கு உடனே பதில் கொடுத்த இராதாகிருஷ்ணன் அவர்கள், “கழுதைகள் ஒரே நிறம். ஆனால், குதிரைகள் பல்வேறு நிறம் கொண்டவை. குதிரைகளோடு கழுதையை ஒப்பிடவே முடியாது”என்று சொன்னார். 1927ம் ஆண்டு, ஆந்திரப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் நெஞ்சம் நெகிழப் பேசிய இவர், ‘இந்தியாவின் நன்மைக்காக நீங்கள் உழைக்க விரும்பினால், இந்தியாவின் கடந்தகால வரலாற்றை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். வியர்வை சிந்தி உழைக்கும் கைவினைஞர்களையும், விவசாயிகளையும் ஆதரியுங்கள். கிராமங்களில் குடியேறி, உங்கள் உடன்பிறப்புக்களாகிய கிராமவாசிகளுக்குக் கல்வியறிவை ஊட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று நாம் பெருமையாகப் பேசிக்கொள்ளும் தூய்மை இந்தியா திட்டம் பற்றி அன்றே பேசியவர், இராதாகிருஷ்ணன் அவர்கள். 1930ம் ஆண்டு, மைசூர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, புதிதாகப் பட்டம் பெற்ற பட்டதாரிகளிடம் அவர் முதலில் சொன்ன அறிவுரை ‘தூய்மை இந்தியா’என்பதுதான். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அறிவையும், இந்தியாவின் சமய அறிவையும் பெற வேண்டும் என்று இவர் விரும்பினார். இதன் வழியாக ஒரு மனிதர், மாமனிதராக மாறிவிட முடியும்’என்று சொன்னார். காந்தியடிகள் சுடப்பட்டு இறந்தபோது மனம் வேதனைப்பட்ட இராதாகிருஷ்ணன் அவர்கள், உலகம், மகாத்மாக்களை மதிக்கும் காலம் எப்போது வரும்? காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதையும் அன்புக்காகவே அர்ப்பணம் செய்தவர். அந்த அன்புக்கு மதிப்பு தரும்போதுதான், உலகத்தில் அமைதி நிலவும்’என்றார். பாரத ரத்னா விருது உட்பட (1954), எண்ணிக்கையில் அடக்கமுடியாத விருதுகளை வாங்கிக் குவித்த இவர், 15 முறை இலக்கியத்துக்கான நொபெல் விருதுக்காகவும், 11 முறை அமைதிக்கான நொபெல் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார். ஆசிரியர்கள்தாம் தேசத்தின் மூளையாக இருக்க வேண்டும்’ என்று கூறியவர் இவர். இராதாகிருஷ்ணன் அவர்கள், ஆசிரியப் பணிமீது காட்டிய தீராத அன்பால், 1962ம் ஆண்டு முதல், அவரது பிறந்தநாள், இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வருகிற அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்.

இன்றும் பல நல்லாசிரியர்கள் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர். புத்தக அறிவுடன் பல்வேறு பொதுநல ஆர்வத்தையும் தூண்டி விடுகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன் அவர்கள்,  தனது சொந்த முயற்சியால், அந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார். சிட்டம்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 36 வகையான மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இங்குள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 169. அத்தனையும் சிவராமன் வழிகாட்டுதலில் இந்தப் பள்ளி மாணவர்கள் பார்த்துப் பார்த்து நட்டு வளர்த்தவை எனச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய நல்லாசிரியர்களை இந்த நாளில் வாழ்த்துவோம்.

அ‌ப்து‌ல் கலா‌ம் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றுச்சூழல் பற்றிய தமிழ் அகராதி, எதிர்கால கல்வித்திட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு விழா‌வி‌ல் கல‌ந்துகொ‌ண்டு பேசுகை‌யி‌ல், தனது ஆசிரியர் சிவசுப்பிரமணி அய்யர் அவர்கள் பற்றிக் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் இவ்வாறுதான் பணியாற்றவேண்டும் எ‌ன்று கூறினார். சிவசுப்பிரமணி அய்யர் அவர்கள், பாடம் சொல்லிக்கொடுப்பதை, ஒரு கடமையாகக் கருதாமல், ஒரு இலட்சியமாகவே நினைத்து, முழு ஈடுபாட்டுடன் பாடம் நடத்துவார். அவரின் பழக்கவழக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு ஓர் ஆசிரியராக மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். மாணவர்களுக்கு பாடம் புரியவில்லை என்று சொன்னால், ஒருபோதும் கோபப்பட மாட்டார். எனவே ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்த வேண்டும். இலட்சியம் உருவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு புரியும்வரை பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாக கருதாமல், ஒரு பேறாகக் கருத வேண்டும் என்றார் அ‌ப்து‌ல் கலா‌ம். கல்வி வியாபாரமாகிவரும் இக்காலத்தில், ஆசிரியர்களும் கடமையுணர்வுடன் செயலாற்றுவார்களாக. அதேநேரம் மாணவர்கள், தங்களை உச்சத்திற்கு ஏற்றிவிட்ட ஏணிப்படிகளாகிய ஆசிரியர்களை,  வழிகாட்டும் இந்தக் கலங்கரை விளக்கங்களை, மறவாமல் நன்றியுடன் நடந்துகொள்வார்களாக. வாழ்க நல்லாசிரியர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.