2017-09-04 16:28:00

அன்னை தெரேசா பெயரால் இருவாரக் கொண்டாட்டங்கள்


செப்.04,2017. அன்னை தெரேசா இறையடி சேர்ந்ததன் 20ம் ஆண்டு மற்றும் புனிதராக அறிவிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு ஆகியவற்றை நினைவுகூரும் விதமாக, இருவார சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது, அல்பேனியா நாடு.

அன்னை தெரேசாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 26ம் தேதி துவக்கப்பட்ட இந்த இருவாரக் கொண்டாட்டங்கள், செப்டம்பர் 4ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் புனிதர் பட்ட அறிவிப்பையும், 5ம் தேதியன்று நினைவுகூரப்படும் அன்னையின் மரணத்தையும் குறித்த சிறப்பு ஆன்மீகக் கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசா தொடர்புடைய கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இஞ்ஞாயிறன்று, Montenegroவிலுள்ள Antivari பகுதியில், மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட கோவில் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. 

இந்த மறைமாவட்டம் உருவானதன் 900மாம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, வெளிநாடுவாழ் அல்பேனிய மக்களின் நிதி உதவியுடன், புனித பேதுரு பெயரிலான இந்தக் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

அன்னை தெரேசா இறந்ததன் 20ம் ஆண்டான செப்டமபர் 5ம் தேதியன்று, கோசொவோ நாட்டில் உள்ள பிரிஸ்டினா நகரில் அமைக்கப்பட்டுள்ள புனித அன்னை தெரேசா திருத்தலம், திருத்தந்தையின் பிரதிநிதியான, கர்தினால் எர்னஸ்ட் சிமோனி அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, திறந்து வைக்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.