2017-09-02 17:15:00

பொது நலனில் அக்கறைகொண்ட ஒரு கலாச்சாரம் தேவை


செப்.,02,2017. கசக்ஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் இடம்பெற்றுவரும் "எக்ஸ்போ 2017" அனைத்துலக கண்காட்சியில், செப்டம்பர் 2, இச்சனிக்கிழமையன்று, திருப்பீட தேசிய நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

தனியொருவரின் பொருளாதார இலாபங்களுக்காக அல்லாமல், இவ்வுலக நலனையும், அனைத்து சமூகங்களின் வாழ்வையும் கருத்தில் கொண்டதாக,  அனைத்து வளங்களும், இயற்கை, மற்றும், தொழில்நுட்ப ஆற்றலும் பயன்படுத்தப்படவேண்டும் என தன் செய்தியில் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்த வளர்ச்சியை நோக்கியதாக அனைத்தும் இருக்கவேண்டும் என கேட்டுள்ளார்.

இயற்கை ஆற்றலின் பயன்பாடுகள், பொருளாதார கண்ணோட்டத்தோடு நோக்கப்படும்போது, மோதல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்யுள்ள திருத்தந்தை, இத்தகைய வேளைகளில் சமூகங்களிடையே மனம் திறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அனைத்துலக கண்காட்சிக்கு, 'வருங்கால ஆற்றல்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டிருப்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது முதலீட்டாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மட்டும் உரியதல்ல, மாறாக, கலாச்சாரம், அரசியல், கல்வி, மற்றும், மத உலகையும் உள்ளடக்கியது எனவும் எழுதியுள்ளார்.

' வருங்கால ஆற்றல்' என்ற தலைப்புடன் கசக்ஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில், ஜூன் மாதம் 10ம் தேதி துவக்கப்பட்ட "எக்ஸ்போ 2017" அகில உலக கண்காட்சி, செப்டம்பர் 10 வரை, நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.