2017-09-02 15:14:00

பாசமுள்ள பார்வையில்: "அன்னை, வேண்டும்; ஆசிரியர், வேண்டாம்"


புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வெளியிட்ட திருமடல்களில், “Mater et Magistra” என்ற மடல், புகழ்பெற்ற ஒரு மடல். சமுதாயப் பிரச்சனைகள் பெருகிவந்த இவ்வுலகில், திருஅவை ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவது “Mater et Magistra”, அதாவது, "அன்னையும் ஆசிரியரும்" என்ற அந்த திருமடல். அம்மடல் வெளியான ஒரு சில வாரங்களில், ஒரு கத்தோலிக்க எழுத்தாளர், பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் தலைப்பு: "அன்னை... வேண்டும்; ஆசிரியர்... வேண்டாம்" (“Mater sí, Magistra no!”) என்று அமைந்திருந்தது.

அளவுகடந்த அன்பைப் பொழியும் அன்னையாக திருஅவையை உருவகித்துப் பார்க்கையில் மனம் குளிர்கிறது. ஆனால், கண்டிப்புடன் பாடங்கள் புகட்டும் ஆசிரியராக திருஅவையை எண்ணிப்பார்க்கையில் கசக்கிறது. காயப்பட்ட வேளைகளில், அன்னையின் அணைப்பை உணர்வதற்கு, நாம், கோவிலையும், திருஅவையின் பணியாளர்களையும் நாடிச் சென்றுள்ளோம். ஆனால், காயப்பட்டதற்குக் காரணம் நாம்தான் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியராக, திருஅவை மாறியபோது, அந்தக் கண்டிப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

'அன்னை' என்ற இலக்கணத்தில், 'ஆசிரியர்' என்ற அம்சமும் இணைந்துள்ளது. எந்த ஓர் அன்னையும் தன் குழந்தைக்கு அளவுகடந்த அன்பை மட்டுமே எந்நேரமும் பொழிந்தால், அக்குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு அந்த அன்பே ஒரு தடையாக அமையும். தவறும்போது, தடுமாறும்போது அக்குழந்தைக்குத் தகுந்த வழியைக் காட்டுவதும் அன்னையின் பொறுப்பு. அவ்வேளைகளில், கரிசனை கலந்த கண்டிப்புடன் செயலாற்றும் ஓர் ஆசிரியராக அன்னை மாறவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.