2017-09-02 16:58:00

தெற்கு ஆசிய வெள்ளத்தால் 1,60,00,000 குழந்தைகள் பாதிப்பு


செப்.,02,2017. தொடர்ந்த மழை மற்றும் பெருவெள்ளத்தால் தெற்கு ஆசியாவின் மூன்று நாடுகளில் பெருமளவான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பான UNICEF, கவலையை வெளியிட்டுள்ளது.

அண்மை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம், இந்தியா பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இந்த ஐ,.நா. அமைப்பு, இக்குழந்தைகளுக்கும், இவர்களின் குடும்பங்களுக்கும் அவசரகால உதவிகள் தேவைப்படுவதாக கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து, 1,288 பேரின் உயிரிழப்புக்கும், 4 கோடியே 50 இலட்சம் பேர் பாதிப்படைவதற்கும் காரணமாகியுள்ள இந்த வெள்ளப்பெருக்கினால், எண்ணற்ற குழந்தைகள் தங்கள் வீடுகளையும் பள்ளிகளையும், நண்பர்களையும் இழந்துள்ளதாக உரைத்த, UNICEF நிறுவனத்தின் தெற்கு ஆசிய இயக்குனர் Jean Gough அவர்கள், மழை இன்னும் தொடர்ந்தால், பெரும் இழப்புகள் தடுக்க முடியாததாகிவிடும் என்ற கவலையை வெளியிட்டார்.

பங்களாதேஷ் நாட்டில் மட்டும், 30 இலட்சம் குழந்தைகள் உட்பட 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில், 6 இலட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 17 இலட்சம் மக்களும், இந்தியாவில், 1 கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 கோடியே 10 இலட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.