2017-09-02 17:15:00

கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய மதங்கள் கூறும் படைப்பின் இறைவன்


செப்.02,2017. இவ்வுலகம் என்ற பொதுவான இல்லத்தையும், அங்கு வாழும் மனிதர்களை ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் படைத்தவர் இறைவன் என்பதை, கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய மதங்கள் ஏற்றுக்கொள்கின்றன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஆகஸ்ட் 30, இப்புதன் முதல், கசக்ஸ்தான் நாட்டுத் தலைநகர் அஸ்தானாவில் மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 31, இவ்வியாழனன்று பலசமய கூட்டம் ஒன்றில் துவக்க உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

கசக்ஸ்தான் நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவானதன், 25ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், கசக்ஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெறும் "எக்ஸ்போ 2017" உலகக் கண்காட்சியில் திருப்பீடமும் பங்கேற்பது மகிழ்வைத் தருகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இவ்வுலகம் சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தரும் அளவு தேர்ச்சி பெற்றவர்கள் நாம் அல்ல என்றாலும், மத உணர்வுள்ளவர்கள் என்ற முறையில், இவ்வுலகையும், ஏனைய மனிதர்களையும் எவ்வாறு நோக்குவது என்ற கண்ணோட்டத்தை நம்மால் வழங்கமுடியும் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஆகஸ்ட் 30, இப்புதன் முதல், செப்டம்பர் 4 வருகிற திங்கள் முடிய, கசக்ஸ்தான் நாட்டில், 'எக்ஸ்போ 2017' உலகக் கண்காட்சி நிகழ்விலும், ஏனைய கூட்டங்களிலும் கலந்துகொள்வார் என்று, அத்திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.