2017-09-02 16:52:00

இறையடி சேர்ந்த கர்தினால் Murphy-O’Connor


செப்.,02,2017. இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முன்னாள் பேராயர், கர்தினால் Cormac Murphy-O’Connor அவர்களின் மறைவையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிடும் இரங்கல் செய்தியை, வெஸ்ட்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் Vincent Nichols அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இச்செய்தி, அப்பெருமறைமாவாட்ட விசுவாசிகளுக்கு, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும், விசுவாசிகளுக்கு கர்தினால் Murphy-O’Connor அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்வதாகவும் அமைந்துள்ளது.

நற்செய்தியை அறிவிப்பதிலும், ஏழைகள் மீதுள்ள அக்கறையிலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலிலும், கர்தினால் Murphy-O’Connor அவர்கள் காட்டிய ஈடுபாட்டை தன் இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டி, பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 24ம் தேதி தன் 85வது வயதை நிறைவு செய்த கர்தினால் Murphy-O’Connor அவர்கள், இவ்வெள்ளியன்று இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 222 ஆக குறைந்துள்ளது. இதில் 121 பேர், 80 வயதிற்குட்பட்டவர்களாய், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.