2017-09-01 16:31:00

படைப்பை பாதுகாப்பது – கிறிஸ்தவர்களின் அழைத்தல்


செப்.01,2017. படைப்பின் பாதுகாவலர்கள் என்பது, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான அழைத்தல் என்று, மும்பைப் பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 1, இவ்வெள்ளியன்று, படைப்பின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள உலக செப நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது நாம் சந்திக்கும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களில், இறைவனின் பாதுகாப்பை தேடவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடி, உள்ளார்ந்த மனமாற்றத்திற்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இறைவா! உமக்கேப் புகழ்" என்ற திருமடல் வழியே விடுத்துள்ள அழைப்பை, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் செய்தியில் மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார்.

படைப்பின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள உலக செப நாளான செப்டம்பர் 1ம் தேதி, இவ்வாண்டு, முதல் வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளதால், இயேசுவின் திரு இதயத்திற்கு முன் கூடிவரும் அனைவரும், படைப்பையும், சுற்றுச்சூழலையும் காக்கும் நல்மனத்திற்காக வேண்டிக்கொள்ளுமாறு, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.