2017-09-01 16:15:00

புனித லீமா ரோஸ், 4ம் நூற்றாண்டுக்கு திருத்தந்தையின் செய்தி


செப்.01,2017. தன் வாழ்வு இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்ற தணியாத நெருப்பால், லீமா நகர் புனித ரோசின் உள்ளம் பற்றியெரிந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டிற்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

புனித லீமா ரோஸ், 1617ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி இறையடி சேர்ந்ததன் நான்காம் நூற்றாண்டு நினைவு கொண்டாட்டங்கள், அண்மையில் நிறைவுக்கு வந்த தருணத்தையொட்டி, திருத்தந்தை அனுப்பிய செய்தி, லீமா பேராலயத்தில் வாசிக்கப்பட்டது.

இந்தக் கொண்டாட்டங்களில் தன் சார்பில் கலந்துகொள்ள, Quitoவின் முன்னாள் பேராயர், கர்தினால் Raúl Eduardo Vela Chiriboga அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்திருந்தார்.

புனித லீமா ரோஸ் அவர்களின் வாழ்வை, தன் செய்தியில் சுருக்கமாக நினைவுகூர்ந்த திருத்தந்தை, இப்புனிதர், படைப்பின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட மதிப்பையும் சுட்டிக்காட்டினார்.

பெரு நாட்டின் லீமா நகரில், 13 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில், 1586ம் ஆண்டு, 10வது குழந்தையாகப் பிறந்த ரோஸ், இசபெல்லா என்ற திருமுழுக்குப் பெயருடன், தன் சிறுவயது முதல், இறைவனுக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்தவர்.

1609ம் ஆண்டு, தன் 23வது வயதில் துறவு வாழ்வை மேற்கொண்ட ரோஸ், எட்டு ஆண்டுகள் சென்று, 1617ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவரை, திருத்தந்தை பத்தாம் கிளமென்ட் அவர்கள், 1671ம் ஆண்டு, புனிதராக உயர்த்தினார். புனித லீமா ரோஸ், பெரு நாட்டிற்கும், பிலிப்பீன்ஸ் நாட்டிற்கும் பாதுகாவலராக விளங்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.