2017-09-01 15:58:00

பாசமுள்ள பார்வையில்...: இறந்த குழந்தைக்கு உயிர் தந்த தாய்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2010ம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆண், பெண் என, இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவர்கள் பெருமுயற்சி செய்தனர். இதில், பெண் குழந்தை உயிர்பிழைத்தது; ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கேட் ஓக்கிடம் கூறினர். பிறந்த சில மணிநேரங்களிலேயே தான் பெற்ற குழந்தை இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அவர், தன் குழந்தையை தன்னிடம் கொண்டு வரும்படி கூறினார். கொண்டு வந்த குழந்தையை தனது மார்போடு கட்டியணைத்தபடி, தொடர்ந்து இரண்டு மணிநேரம் தனது உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார். அப்போது குழந்தை மூச்சுவிடுவதை உணர்ந்த அவர், உடனடியாக மருத்துவர்களை அழைத்தார். மருத்துவர் ஒருவர் குழந்தையை சோதித்து பார்த்தபோது, குழந்தை உயிருடன் இருந்தது. இதைத் தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியதுடன், மற்ற மருத்துவர்களையும் அழைத்து, குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததால், சிறிது நேரத்தில் குழந்தை கண்விழித்தது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கேட் ஓக் கூறுகையில், தங்கள் நாட்டில் தாய் கங்காரு குட்டிகளை எவ்வாறு பாதுகாக்கும் என்ற கதைகளை தான் சிறு வயதில் கேட்டதாகவும், கங்காரு குட்டி பிறந்தவுடன் தாயின் கதகதப்போ, வாசமோ, இதயத்துடிப்பின் ஓசையோ கேட்கவில்லை என்றால் அது துடிதுடித்து உயிரிழந்துவிடும் என்பது தெரியும் எனவும் கூறினார். ஒரு தாய் கங்காரு எப்படி தனது குட்டியை வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள பைக்குள் அரவணைத்து வைத்திருந்து கதகதப்பு ஏற்றுமோ, அதேபோல் எனது சருமத்தின் கதகதப்பில் பிரிந்துப்போன எனது குழந்தையின் உயிர் மீண்டும் உடலில் குடியேறும் என நான் முழுமையாக நம்பியதாகவும், அது வீண் போகவில்லை, தன் குழந்தை உயிருடன் வந்துவிட்டான் எனவும், நெகிழ்ச்சியுடன் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.