2017-09-01 15:53:00

படைப்பின் பாதுகாப்பு உலக செப நாளுக்கென செய்தி


செப்.01,2017. படைப்பின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள உலக செப நாளான செப்டம்பர் 1, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து, செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர்.

இவ்விரு தலைவர்களும் முதன்முறையாக ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள இச்செய்தியில், படைப்பின்மீது நாம் காட்டவேண்டிய 'மதிப்பு' மற்றும் 'பொறுப்பு' என்ற இரு கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த பூமிக்கோளம் எழுப்பும் அழுகுரலுக்கும், சமுதாயத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளோரின் தேவைகளுக்கும் செவிமடுக்கும்படி, சமுதாய, பொருளாதார, அரசியல், மற்றும் கலாச்சார துறைகளில் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் தாங்கள் விண்ணப்பிப்பதாக, திருத்தந்தையும், முதுபெரும்தந்தையும் இச்செய்தியில் கூறியுள்ளனர்.

ஒரு கொடையென இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ள படைப்பைக் காப்பதில், அனைவரும் பொறுப்புடன் செயலாற்றவேண்டும் என்று இச்செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எல்லையற்ற இலாபத்தை பெருக்குவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள சுயநல வர்த்தகத்தால், சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கள் பெரிதும் சீர்குலைந்துள்ளதை மறுக்கமுடியாது என்று கூறும் இச்செய்தி, இத்தகையப் போக்கு நம்மை பெரும் ஆபத்திற்கு இட்டுச்செல்லும் என்று எச்சரித்துள்ளது.

இவ்வுலகை ஆள்வது என்ற கண்ணோட்டத்திலிருந்து மாறி, இவ்வுலகுடன் இணைந்து வாழ்வது என்ற கண்ணோட்டத்தை உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற செபத்தை, நல்மனம் கொண்ட அனைவரும் செப்டம்பர் 1ம் தேதி எழுப்பவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்களும் இச்செய்தியில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.