2017-09-01 16:29:00

திருத்தந்தையின் செப்டம்பர் மாத செபக்கருத்து


செப்.01,2017. பங்குத்தளங்களின் பணியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதத்திற்கென உருவாக்கியுள்ள செபக்கருத்து, காணொளி வடிவில், இவ்வெள்ளியன்று வெளியானது.

பங்கு கோவில் ஒன்றில் அமர்ந்திருக்கும் இளையோர், மற்றும், நடுத்தர வயதினர், கோவில் வழிபாடு முடிந்து வெளியே வந்து, சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதுபோல் இந்த காணொளிக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பின்னணியில் ஒலிக்கும் திருத்தந்தையின் குரல், பங்குத்தளங்கள் குடும்பங்களோடு, சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளவேண்டும் என்று விண்ணப்பிக்கிறது.

மேலும், பங்கு இல்லங்களின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கவேண்டும் என்றும், இவ்விதம், பங்கில் இருப்பவர்களும், அவர்களுடன் இயேசுவும் எந்நேரமும் வெளியில் சென்று மக்களைச் சந்தித்து, மகிழ்வின் செய்தியைப் பரப்பஇயலும் என்றும், திருத்தந்தை, இக்காணொளியில் கூறியுள்ளார்.

பங்குத்தளங்கள், வெறும் அலுவலகங்களாக இல்லாமல், மறைப்பணியாற்றும் உள்ளத்துடன், நம்பிக்கையையும், பிறரன்பையும் பறைசாற்றும் இடங்களாக மாறவேண்டும் என்று செபிப்போம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாத்த்திற்கென வெளியிட்டுள்ள செபக்கருத்தாக அமைந்துள்ளது.

www.thepopevideo.org என்ற வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த காணொளிப் பதிவில், திருத்தந்தை, தன் கருத்துக்களை, இஸ்பானிய மொழியில் பகிர்ந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.