2017-08-31 15:51:00

ஐரோப்பிய, அமெரிக்க யூத மத குருக்களுடன் திருத்தந்தை


ஆக.31,2017. ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவிலிருந்து உரோம் நகருக்கு வருகை தந்துள்ள யூத மத குருக்கள் பலரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்தினார்.

யூதர்களுக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே, பயன் நிறைந்த உரையாடல்கள் நிகழ்ந்துவரும் இக்காலக்கட்டத்தில், 'எருசலேமுக்கும் உரோமுக்கும் இடையே’ என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளியாகியிருப்பது, தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருவதாக திருத்தந்தை கூறினார்.

'Nostra Aetate' என்ற பெயரில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வெளியிட்ட மடலில், கிறிஸ்தவ-யூத உறவு வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்கரும், யூதரும் கொண்டிருக்கும் அடிப்படை மத நம்பிக்கையும், நன்னெறி விழுமியங்களும் உரையாடல் முயற்சிகளை ஊக்குவிக்கும் என்பதையும், திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

மேலும், "இதயம் நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்தினால், நீங்கள் ஆண்டவருக்கும் அடுத்தவருக்கும் அருகிலிருப்பதை உணர்வீர்கள்" என்ற சொற்கள், ஆகஸ்ட் 1, இவ்வியாழனன்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

@pontifex என்ற முகவரியுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், ஆகஸ்ட் 31ம் தேதி முடிய, 1.283 என்ற எண்ணிக்கையில் உள்ளன என்பதும், அவரது செய்திகளை ஆங்கிலத்தில் ஆர்வமாகப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை, 1, 27,65028 என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.