2017-08-30 16:33:00

சீனாவில், கோவில் இடிப்பைத் தடுத்த கத்தோலிக்கர்கள்


ஆக.30,2017. நூறாண்டு கால பழமை வாய்ந்த கத்தோலிக்க கோவில் ஒன்றை சீன அரசு இடிப்பதற்கு முனைந்தவேளையில், அங்கு கூடிய கத்தோலிக்கர்கள் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

சீனாவின் Shanxi பகுதியில் உள்ள Wangcun எனுமிடத்தில் அமைந்துள்ள கத்தோலிக்கக் கோவிலை இடித்து, அவ்விடத்தில் நகரச் சதுக்கம் ஒன்றை உருவாக்க நினைத்த அரசின் திட்டத்தை எதிர்த்து, கத்தோலிக்கர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், அந்தக் கத்தோலிக்கக் கோவிலை பழமைச் சின்னம் என்று அறிவித்த அரசு அதிகாரிகள், தற்போது தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது, கத்தோலிக்கர்களை அதிர்ச்சியடையச் செய்தது என்று ஆசிய செய்தி மேலும் கூறியுள்ளது.

கோவிலை இடிக்க 'புல்டோசர்' இயந்திரங்கள் வந்து சேர்ந்த வேளையில், அந்நகரில் வாழ்ந்த பல நூறு கத்தோலிக்கர்கள், "இயேசுவே எங்களைக் காப்பாற்றும்" என்றும், "அன்னை மரியே, எங்களுக்கு தயவுகாட்டும்" என்றும் செபித்தபடி, கோவிலைச் சுற்றி நின்றதால், இடிக்கும் பணியை நகர அதிகாரிகள் கைவிட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.