2017-08-30 16:29:00

இலங்கை கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆயர்கள் கண்டனம்


ஆக.30,2017. எந்த ஒரு காரணத்தைக் கொண்டும், மனித உயிர்களை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று, இலங்கை ஆயர் பேரவை கூறியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் உருவான கருவையும், அங்கக்குறைப்பாடுகள் உள்ளதெனக் கண்டறியப்படும் கருவையும் கலைப்பதற்கு, இலங்கை அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை கண்டனம் செய்து, இலங்கை ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கருவில் வளரும் குழந்தை முதல், இயற்கையாக மரணம் எய்தும் மனிதர்கள் வரை, எந்த ஒரு நிலையிலும் மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று, ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் கெலனியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு தகவல் திரட்டின்படி, இலங்கையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு நாளும், 650 கருக்கலைப்புகள் நடத்தட்டப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.