2017-08-29 15:40:00

உடனடி பலன் எதிர்பார்ப்பால் அழியும் இயற்கை வளங்கள்


ஆக.,29,2017. பிரேசில் நாட்டின், அமேசான் மழைக்காடுகளில், பழங்குடியினத்தவருக்கென, சட்டம் வழியாக பாதுகாக்கப்பட்டுவந்த பகுதிகளை, தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டுள்ள அந்நாட்டு அரசுத் தலைவரின் செயல் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது, அமேசான் பகுதி தலத் திருஅவை.

1984ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் வழியாக, பிரேசில் நாட்டின் வடகிழக்கில் பாதுகாக்கப்பட்டு வந்த இயற்கைவளப் பகுதியின் 30 விழுக்காட்டை, தற்போது தனியார் நிறுவனங்களின் சுரங்கத் தொழிலுக்கு என திறந்துவிட்டுள்ளது பிரேசில் அரசு.

இது குறித்து தங்கள் கவலையை வெளியிட்ட அமேசான் பகுதி ஆயர்கள், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கென, காடுகளையும், இயற்கை வளத்தையும் அழிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என தெரிவித்துள்ளனர்.

உலகத்திற்கே நுரையீரலாகச் செயல்படும், அமேசான் காடுகளை, பொருளாதார இலாபங்களுக்காக அழிக்க முன்வருவது, தாய் பூமிக்கு நாம் இழைக்கும் மிகப்பெரும் துரோகம் என தங்கள் அறிக்கையில் மேலும் கவலையை வெளியிட்டுள்ளனர் அமேசான் பகுதி தலத்திருஅவை அதிகாரிகள்.

நுகர்வுக் கலாச்சாரத்தால் ஆக்ரமிக்கப்பட்டு, உடனடி பலனையும், குறுகிய வளர்ச்சியையும் மனதில் கொண்டதாய், இயற்கை வளங்களின் அழிவுக்கு இட்டுச் செல்லும் கொள்கைகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளதையும் தங்கள் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளனர், தலத்திருஅவை அதிகாரிகள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.