2017-08-29 15:34:00

காரணம் கூறப்படாமல், தென் சூடான் திருஅவை பணியாளர் கைது


ஆக.,29,2017. தென் சூடானின் Wau மறைமாவட்ட நீதி, அமைதி அவையின் ஒருங்கிணைப்பாளரை, எவ்வித தெளிவான காரணமும் கூறாமல் கைது செய்துள்ளது, அந்நாட்டு காவல்துறை.

Wau பகுதியின் இராணுவத் தளம் ஒன்றில் இம்மாதம் 3ம் தேதி இடம்பெற்ற இராணுவக் கருத்தரங்கில் உணவருந்திய மூன்று அதிகாரிகள் இறந்தது, மற்றும் 57 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து, Wau மறைமாவட்டத்தின் நீதி, அமைதி அவையின் ஒருங்கிணைப்பாளர் Natalina Andrea Mabu என்ற பெண்மணி, காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அருகிலிருந்த உணவு விடுதி ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவை உண்டதால் மூன்று இராணுவ அதிகாரிகள் இறந்தது, 57 பேர் பாதிக்கப்பட்டது ஆகியவற்றிற்கும், திருஅவை பணியாளருக்கும் என்ன தொடர்பு என்பதை, காவல்துறை இதுவரை அறிவிக்க மறுத்து வருகிறது.

தென் சூடானிலுள்ள ஐ.நா. இராணுவப் பணியாளர்கள், மனித உரிமைகளை மதிப்பதன் அவசியம் குறித்து விவாதிக்க‌ ஏற்பாடுச் செய்யப்பட்ட Wau இராணுவ முகாம் கருத்தரங்கில், இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் :  FIDES/ வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.