2017-08-28 16:11:00

வாரம் ஓர் அலசல் – சுயமாகச் சிந்திப்போமா?


ஆக.29,2017. கடந்த வாரத்தில், தமிழகத்திலிருந்து இருவர் வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்திருந்தனர். இருவருமே நிறுவனங்களின் இயக்குனர்கள். தமிழ் நாட்டின் அரசியல் பற்றி ஒவ்வொரு நாளும் வாசிக்கின்ற செய்திகளை வைத்து, நாட்டின் தற்போதைய நிலவரம் எப்படி என இருவரிடமும் கேட்டோம். ஒருவர் உடனடியாகச் சொன்னார் – எதுவும் நடந்தால்தானே அதைப் பற்றிச் சொல்ல என்று. மற்றவர் சொன்னார் – வாயைத் திறக்கவே பயமாக உள்ளது. அரசு பற்றி ஏதாவது பேசிவிட்டால் உடனே ரெய்டுக்கு வந்துவிடுவார்கள் அல்லது காவல்துறை வந்து நிற்கும் அல்லது வேறு வழியில் மிரட்டல் வரும், அதனால் என்னிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள் என்று. தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குடிமகன்கள் அதிகரிப்பு. தமிழகத்திலிருந்த 6,826 மதுக்கடைகள் தற்போது 2,741 கடைகளாக சுருங்கியிருக்கின்றன. இருந்தாலும் மது விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், மதுவின் தரம் நாளுக்கு நாள் படுமோசமாகி வருவதால் குடி தொடர்பான நோய்களும் அடிமைத்தனமும் அதிகரித்து வருகின்றன என, தி இந்து தினத்தாளில், பத்து நாட்களுக்குமுன் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. தினமணி தினத்தாளில் இப்படியொரு செய்தி வெளியானது.

சென்னை மணலியைச் சேர்ந்த 45 வயது துரை ராஜ் என்பவர், அடிக்கடி சிறு, சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர். துரை ராஜுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்ததால், குடிப்பதற்கு பணம் கிடைக்காதபோது, தன் மனைவி, மகளை அடித்து அவர்கள் வீட்டுச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தையும் பிடுங்கிச் செல்வது வழக்கம். அவர்களிடமும் பணம் இல்லாது போனால், திருட்டு, வழிப்பறி, தகராறு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறை செல்வார். அவரின் மனைவி, தங்களின் ஒரே மகளின் எதிர்கால நலனுக்காகவும், மகளுக்குத் திருமணம் நடத்த வேண்டியும் ஒரு சிறு தொகையை சேமித்து வந்துள்ளார். ஆனால் துரை ராஜுக்கோ மகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் எண்ணமே இல்லை. சில மாதங்களுக்குமுன் துரை ராஜ், தன் மனைவி சேமித்து வைத்திருந்த அந்த சொற்பத் தொகையையும் குடிப்பதற்காகத் தருமாறு கேட்டு சண்டையிட்டிருக்கிறார். மனைவி மறுக்கவே, சண்டை முற்றி, துரை ராஜ், மனைவியை பிளேடால் கீறி இருக்கிறார். கணவனின் அடாத செயலால் மனமுடைந்த மனைவி, உடனடியாக அப்போது அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, துரை ராஜ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கணவன் சிறையிலிருந்த காலக்கட்டத்தில், தன்னிடமிருந்த தொகையைக் கொண்டு மகளுக்குத் திருமணத்தை நடத்தி முடித்தார் அவர். சிறை சென்ற துரை ராஜ் விடுதலையாகி, வீடு திரும்பியபோது மகளுக்குத் திருமணமானது தெரிந்து கோபமாகி, தன் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டமைக்காக, மகளை மூர்க்கமாகத் தாக்கி இருக்கிறார். அப்போது மனைவி வீட்டில் இல்லை. மனைவி வீடு திரும்பியபோது, நடந்த விவரங்களைக் கேள்விப்பட்டு மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார். அன்றிரவு, கணவன் மீதான உச்சகட்ட கோபத்திலும், ஆத்திரத்திலும் உழன்று கொண்டிருந்த மனைவி, கணவன் தூங்கியபின் அவரது தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு கொன்று விட்டு... அருகிலிருந்த காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

குடிபோதையால் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மிருகத்தனமாக நடந்துகொள்ளும் துரை ராஜ் போன்ற குடிகாரர்களுக்கு மரணம் இப்படித்தான் பல சமயங்களில் அமைந்து விடுகின்றது. தமிழகத்தில் இப்போது குடி தொடர்பான நோய்களும்,அடிமைத்தனமும் அதிகரித்து வருகின்றன. இதற்கு  டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகின்றது. தமிழக குடிநோயாளிகள் அண்மைக் காலமாக இவ்வாறு பேசிக்கொள்கின்றார்களாம்.

“மச்சி, முன்னைப் போல இல்லப்பா, இப்ப எல்லாம் ஒருமுறை குடிச்சா திரும்பக் திரும்பக் குடிக்கச் சொல்லுது. தினமும் ஏழெட்டு குவாட்டராச்சும் ஓடிடுதுப்பா. போதையும் பெருசா இல்லை. சரக்குல வேறு எதையோ கலக்குறாங்க...”

குடிநோயாளிகள் சொல்வதற்கேற்ப, அனைத்து மதுக்கடைகளும் இப்போது, உண்டு உறைவிட குடி மையங்களைப் போல ஆகிவிட்டன. மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, எரி சாராயமா? என கேள்வி கேட்டுள்ளது தி இந்து நாளிதழ். அதிகாலை 6 மணிக்கு பாரில் பிளாக்கில் மது வாங்கிக் குடிப்பதில் தொடங்கும் இவர்களின் குடிப் பழக்கம், இரவுவரை நீடிக்கிறது. நண்பர்களிடம் காசு வாங்குவது, சின்னதாய் கூலி வேலை செய்து சம்பாதிப்பது, மதுக்கடைக்கு வருவோரிடம் கையேந்துவது, வண்டியை துடைத்துவிட்டு காசு கேட்பது, பாட்டில் பொறுக்கி விற்பது, பாரில் சப்ளையாராகச் சேர்ந்து சம்பாதித்தபடி மது அருந்துவது உட்பட பல்வேறு வகையில் மதுக்கடைகளின் வாசலிலேயே சிலர் முழுநேர குடிநோயாளிகளாகத் தேங்கிக் கிடக்கிறார்கள். இதில் பெண்களும் சிறுவர்களும் அடக்கம். இரவு நேரங்களில் இவர்கள் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகிறார்கள். சிலர் தாங்களாகவே பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் 12 மதுபான ஆலைகள், 7 பீர் ஆலைகள் இருக்கின்றன. இவை ஆண்டுக்கு 54 கோடி லிட்டர் மது, 25 கோடி லிட்டர் பீர் உற்பத்தி செய்கின்றன. “டாஸ்மாக்கின் ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாய் கோடி விற்பனை, தமிழகத்தில் குடிநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. ஆபத்தான இந்தப் போக்கு மாறவேண்டுமானால் சமூக அளவில் குடிநோய் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் அல்லது அனைத்து மதுக்கடைகளையும் அரசு மூடவேண்டும்”என்றார் டாஸ்மாக்கின் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் தனசேகரன். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவது எல்லாம், கண் துடைப்புக்காக மட்டுமே நடக்கின்றன. இங்கு மதுவை உற்பத்தி செய்வது, அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்களே. அதனால், பெரும்பாலான விதி முறைகள் மீறப்படுகின்றன. பெரும்பாலான ஆலைகளில், பரிசோதனைக்கு அனுப்பப்படும் அந்த ஒரு லிட்டர் மதுவை மட்டுமே சரியான தரத்துக்கு தயாரித்து அனுப்பி சான்றிதழ் பெறுகிறார்கள். சில ஆலைகளில் அதுவும் கிடையாது. சாராயம் காய்ச்சுவதுபோல அப்படியே காய்ச்சி பாட்டிலில் நிரப்புகிறார்கள். விலை குறைவான மது ரகங்களில் பாட்டிலை கழுவுவதுகூட கிடையாது. அதனால்தான் மது பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் மிதக்கின்றன. தமிழகத்தில் குடிநோயாளிகள் குடிப்பது, எரி சாராயத்தைத்தான். முன்பைவிட, மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்கள் அதிகரித்ததற்கும் குடிநோயால் ஏற்படும் மரண விகிதங்கள் அதிகரித்ததற்கும் இதுவே முக்கிய காரணம் என்று தி இந்து தினத்தாளில் சொல்லப்பட்டுள்ளது.

இரங்கநாதன் பரம ஏழை. நிறையச் சம்பாதித்து, வசதியாக வாழவேண்டும் என்கிற ஆசையில், ஒரு ஜென் குருவைத் தேடிச் சென்றார் அவர். எனக்கு ஒரு பெரிய புதையல் கிடைக்கவேண்டும், என்னை ஆசிர்வதியுங்கள் என்று குருவிடம் கேட்டுக்கொண்டார் இரங்கநாதன். உண்மையாகவே உனக்கு ஒரு பெரிய புதையல் கிடைக்கச் செய்கிறேன், ‘நாளை காலை எட்டு மணிக்கு இதே இடத்துக்கு வா என்று கூறினார் குரு. காலையில் மிக உற்சாகமாக வந்த இரங்கநாதனை வரவேற்ற குரு, உன்னுடைய நிழல் உனக்குத் தெரிகிறதா என கேட்டார். ஓ, நன்றாகத் தெரிகிறது சுவாமி என்றார் இரங்கநாதன். அந்த நிழலின் தலைப்பகுதி உள்ள இடத்தில்தான் புதையல் இருக்கிறது. அங்கே தோண்டத் தொடங்குங்கள் என்றார் குரு. நன்றி சுவாமி என, பரபரவென்று நிழலின் தலையை நோக்கி ஓடினார் இரங்கநாதன். இப்போது அது இன்னும் தொலைவுக்குச் சென்றது. விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புதையல் கிடைக்கும்’என கூறிய குரு, தன்னுடைய குடிலுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்துவிட்டார். இரங்கநாதன் தொடர்ந்து ஓடினார். ஆனால் நிழல் மேலும் மேலும் அதிகத் தூரம் சென்றது. அவரால் தன்னுடைய நிழலின் தலையைப் பிடிக்கவே முடியவில்லை. நேரம் நண்பகலை எட்டிக்கொண்டிருந்தது. இப்போது இரங்கநாதனின் நிழல் வெகுவாகச் சுருங்கியிருந்தது. ஆனால் அப்போதும் அவரால் அதன் தலையைப் பிடிக்கமுடியவில்லை. எத்தனை வேகமாக ஓடினாலும் பலன் இல்லை. சரியாக நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சூரியன் உச்சிக்குச் சென்றான். ரங்கநாதனின் நிழல் அவருக்குள் அடங்கிவிட்டது. இரங்கநாதன் புரிந்துகொண்டார் - புதையல் எனக்குள் இருக்கிறது. அதை வெளியில் தேடிப் பயன் இல்லை என்று.

சுகி சிவம் அவர்கள் ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார் - மக்களை அறிவாளிகள் ஆக்கிவிட்டால், தங்கள் பதவிக்கு ஆபத்து என்பதால், இந்திய மதத்தலைவர்கள், மேலும் மேலும் மக்களை முட்டாள்கள் ஆக்குவதையே விரும்புகிறார்கள் என்று. இதை வெகுஜனம் உணரும் நாள் எப்போது வரும்? கவலை நீங்க.. என்று மதுக்கடைகளில் சரணடைவதைவிட்டு, ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் வைத்திருக்கும் புதையலைக் கண்டுணர்ந்து, சுயமாகச் சிந்தித்து கவலை களைந்து மகிழ்வுடன் வாழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.