2017-08-26 14:34:00

இயற்கை இடற்பாட்டை இணைந்து எதிர்கொள்ள ஆயர் அழைப்பு


ஆக.,26,2017. மக்காவ் மற்றும் ஹாங்காங் பகுதிகளை அண்மையில் தாக்கிய புயலின் பாதிப்புக்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், மக்காவ் ஆயர்.

அரசும், சுயவிருப்பப் பணியாளர்கள் அமைப்பும், உதவி நிறுவனங்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள மக்காவ் ஆயர் ஸ்டீபன் லீ அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களிடையே, நல் மனம் கொண்ட குழுவினர் பலர் ஆற்றிவரும் செயல்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் மக்காவ், ஹாங்காங் மற்றும் குவாங்டாங் பகுதிகளில் இடம்பெற்ற பெரும்புயலால், ஒன்பதுபேர் இறந்துள்ளது, மற்றும், திருஅவை கட்டடங்கள் உட்பட பல்வேறு கட்டடங்கள் சேதமாகியுள்ள நிலையில், மக்களுக்கு அனுதாபங்களை வெளியிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர் லீ அவர்கள், மற்றவர்களை குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் நேரமில்லை இது, மாறாக, ஒருவருக்கொருவர் உதவ வேண்டிய நேரமாகும் என அதில் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே, தாங்களாக முன்வந்து பணியாற்றும் சுயவிருப்பப் பணியாளர்களுக்கும், நல்மனம் கொண்டோருக்கும் தன் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார் மக்காவ் ஆயர் லீ.

கடந்த 53 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ள இப்புயலால் ஏறத்தாழ 7000 குடும்பங்கள், சுத்தமானக் குடிநீரும், மின்சாரமும் இன்றி தவிக்கின்றன. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.