2017-08-25 15:17:00

பாசமுள்ள பார்வையில்... : வெற்றியும் தோல்வியும், பாடங்களே


அன்று மாவட்ட அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருந்தன. தன்னிடம் ஆசி பெற வந்த மகன் முகுந்தனைப் பார்த்து, “மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன் முயற்சிசெய்” என வாழ்த்தினார், அவன் தாய்.

எதிர்பார்த்தபடியே முகுந்தனுக்கு முதற்பரிசு கிடைத்தது. அவன் வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்கு வந்தான். அம்மாவோ விருந்து சமைத்துக்கொண்டு இருந்தார். தான் வெற்றி பெற்ற செய்தியை யாரோ அம்மாவிற்கு முன்னதாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனைக் கொண்டாடத்தான் அம்மா விருந்து செய்கிறார் என நினைத்தான்.

தாயை அணைத்துக் கொண்ட முகுந்தன், “அம்மா! நான் வெற்றி பெற்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான். “மகனே! முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த அட்டையைப் பார்” என்றார், அம்மா.

“மகனே! உன் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அதற்காகத்தான் இந்த விருந்து” என அதில் எழுதியிருந்தது. குடும்பத்தினருடன் முகுந்தன் விருந்தை மிக மகிழ்ச்சியுடன் சுவைத்துச் சாப்பிட்டான்.

சிறிது நேரத்திற்குப்பின் அம்மா கொடுத்த அந்த அட்டையை முகுந்தன் கையில் எடுத்தான்; பின்பக்கமும் ஏதோ எழுதி இருப்பதுபோலத் தெரிந்தது; திருப்பிப் பார்த்தான்.

அதில், ‘அன்பு மகனே! தோல்விதான் வெற்றியின் முதற்படி. தோல்வியைக் கண்டுத் துவண்டுவிடாதே. உன்முயற்சி நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கனியைக் கொணரும்’, என அதில் எழுதியிருந்தது.

தோல்வி, வெற்றி  இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை கற்பிக்கவே இந்த விருந்து என்பதை புரிந்துகொண்டான், முகுந்தன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.