2017-08-25 14:56:00

நம்பிக்கையற்ற தண்டனைகள், வெறும் சித்திரவதைகளாக மாறிவிடும்


ஆக.25,2017. எந்த ஒரு தண்டனையும், நம்பிக்கை என்ற தொடுவானத்தை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். நம்பிக்கையற்ற தண்டனைகள், வெறும் சித்திரவதைகளாக மாறிவிடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா நாட்டு இளையோருக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

இளவயதில் குற்றங்கள் புரிந்து சிறைவைக்கப்பட்டிருப்போருக்கு அர்ஜென்டீனா நாட்டின் புவெனஸ் அயிரஸ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள எஸெயிஸா (Ezeiza) மையம் என்ற சீர்திருத்தப்பள்ளி 'மாணவருக்கு' திருத்தந்தை, இவ்வியாழன் மாலை காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இசை உட்பட, பல்வேறு குணமளிக்கும் வழிகளில், இளம் குற்றவாளிகளை சீர்திருத்த முயலும் இந்த மையத்தின் முயற்சிகளை தான் பாராட்டுவதாக, திருத்தந்தை, இஸ்பானிய மொழியில் வழங்கியுள்ள இச்செய்தியில் கூறியுள்ளார்.

இப்பள்ளியில் மேற்கொள்ளப்படும் கல்வி வழியே, இளையோர் மீண்டும் சமுதாயத்தில் தங்கள் வாழ்வைத் தொடர முடியும் என்ற நம்பிக்கையை இந்த மையம் வழங்குவதோடு, இசை போன்ற கலைவடிவங்கள் வழியே, இளையோரின் மனங்களை மேன்மைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு திருத்தந்தை தன் பாராட்டுக்களைக் கூறியுள்ளார்.

சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியேறும் இளையோர் மீண்டும் பிரச்சனைகளை சந்திப்பது நிச்சயம் என்றாலும், அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்டுள்ள நம்பிக்கை, பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தி தரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

பள்ளியில் பயிலும் இளையோர் அனைவரையும் தன் உள்ளத்திற்கு நெருக்கமாக வைத்து, அவர்களுக்காக செபிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, அவர்களை மீண்டும் சந்திக்கும்வரை, புன்முறுவலோடு அவர்களைக் காண விழைவதாகக் கூறி, தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.