2017-08-24 15:27:00

வெனெசுவேலாவின் மிக மோசமான நிலை - கர்தினால் சவினோ


ஆக.24,2017. வெனெசுவேலா நாட்டின் முன்னாள் படைத்தளபதி Raul Isaias Baduel அவர்கள் காணாமற்போனது, சிறைகளில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளது, மற்றும் இதுவரை 110க்கும் மேற்பட்டோர் உயிர் துறந்திருப்பது, இந்நாட்டின் மிக மோசமான நிலையை உலகறியச் செய்கிறது என்று அந்நாட்டு கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

வெனெசுவேலா நாட்டின் படைத்தளபதியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள Baduel அவர்கள், ஆகஸ்ட் 8ம் தேதி முதல், காணாமற்போயிருப்பது, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது என்று கரகாஸ் பேராயர், கர்தினால் Jorge Urosa Savino அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாடெங்கும் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ள இளையோர், சிறைகளில் மிகக் கொடுமையாக நடத்தப்படுவதும், அவர்களில் 37 பேர் கொலையுண்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று, கர்தினால் சவினோ அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தக் கொடியச் சூழலில், துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கும், வறியோருக்கும், உரிமைகள் மறுக்கப்பட்டோருக்கும் கத்தோலிக்கத் திருஅவை ஒன்றிணைந்து ஆற்றிவரும் பணிகள், மனதிற்கு நிறைவைத் தருகின்றன என்று கர்தினால் சவினோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.