2017-08-23 15:59:00

முதுபெரும் தந்தை கிரில், கர்தினால் பரோலின் சந்திப்பு


ஆக.23,2017. இரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாய் பிற்பகலில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை கிரில் அவர்களைச் சந்தித்த வேளையில், "என் சகோதரர் கிரில் அவர்களுக்கும், இரஷ்ய மக்களுக்கும் என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பாக அனுப்பியிருந்த வாழ்த்துக்களை அவரிடம் அளித்தார்.

மாஸ்கோவில் உள்ள, முதுபெரும் தந்தையின் இல்லமான, புனித தானியேல் துறவு மடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, உக்ரெயின், மத்திய கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் அமைதியைக் கொணர்வதற்கு, கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டன.

இத்தாலியின் பாரி எனுமிடத்தில் வணங்கப்பட்டு வரும் புனித நிக்கோலஸ் திருப்பண்டங்கள், அண்மையில் மாஸ்கோவில் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்படுவதற்கு, கத்தோலிக்கத் திருஅவைமேற்கொண்ட முயற்சிகள், இவ்விரு சபைகளுக்கும் இடையே உறவு பாலத்தை அமைக்கும் மற்றொரு கட்டுமானக் கல் என்று இச்சந்திப்பில் கூறப்பட்டது.

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து மேற்கொள்வது, இவ்வுலகிற்கு நாம் காட்டக்கூடிய மிகச் சிறந்த சாட்சியம் என்று முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் இச்சந்திப்பில் கூறினார்.

உக்ரெயின் நாட்டில் நிலவும் அமைதியற்றச் சூழல் குறித்த விவாதத்தில், மனிதர்கள் மோதலில் ஈடுபடும் வேளையில், கிறிஸ்தவ சபைகள் ஆற்றக்கூடிய ஒரே பணி, மக்களை ஒருங்கிணைப்பது மட்டுமே என்ற கருத்து வெளியிடப்பட்டது.

கர்தினால் பரோலின் அவர்களுக்கும், முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த இச்சந்திப்பின் இறுதியில், மரியன்னையின் உருவம் ஒன்றையும், 'சுதந்திரம் மற்றும் பொறுப்பு' என்ற தலைப்பில், முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் எழுதிய நூல் ஒன்றும், கர்தினால் பரோலின் அவர்களுக்கு வழங்கப்பட்டதென ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.