2017-08-23 16:08:00

புனித பத்தாம் பயஸ் வாழ்வு குறித்து கர்தினால் ஸ்டெல்லா


ஆக.23,2017. ஜூசெப்பே சார்த்தோ (Giuseppe Sarto) என்ற சிறுவன், பத்தாம் பயஸ் என்ற புனித நிலையை அடைவதற்கு, பெரும் சாதனைகளைப் புரியவில்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியமினோ ஸ்டெல்லா (Beniamino Stella) அவர்கள்,  ஆகஸ்ட் 21, கடந்த திங்களன்று, புனிதத் திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களின் திருநாள் திருப்பலியை நிறைவேறியபோது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

புனிதம் என்பது ஓர் இலக்கல்ல, அது, இறைவனோடு நம்மை இணைக்கும் ஒரு பாதை என்பதை, புனித பத்தாம் பயஸ் அவர்களின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

இத்தாலியின் வெனெத்தோ (Veneto) எனுமிடத்தில், புனித பத்தாம் பயஸ் அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள Riese Pio X எனும் ஊரில், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார்.

புனித திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய சில நினைவுப் பரிசுகளை, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் அளித்தார் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.