2017-08-23 15:47:00

திருத்தந்தையின் பயணம், கொலம்பிய மக்களுக்கு ஒரு முதலடி


ஆக.23,2017. எந்த ஒரு முயற்சிக்கும் முதலடி மிக முக்கியமானது என்றும், பல ஆண்டுகளாக வன்முறையில் மூழ்கி வேதனைப்பட்டு வரும் கொலம்பியா நாடு, திருத்தந்தையின் வருகையால், நம்பிக்கையை நோக்கி, முதலடியை எடுத்துவைக்க விழைகிறது என்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை கொலம்பியா நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, அந்நாட்டு ஆயர், Fabio Suescún Mutis அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

வன்முறையையும், அநீதியையும் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த கொலம்பியா நாடு, ஒப்புரவு, நம்பிக்கை என்ற நல்ல உணர்வுகளை நோக்கி தன் முதலடிகளை எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை தருவது, மிகப் பொருத்தமான நிகழ்வாக அமைந்துள்ளது என்று ஆயர் Mutis அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

"நாம் முதலடியை எடுத்து வைப்போம்" என்ற விருது வாக்குடன் நடைபெறும் இந்த திருத்தூதுப் பயணத்தின் ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஆயர் Mutis அவர்கள், கொலம்பியா நாட்டின் இராணுவத்திற்கு ஆன்மீக வழிகாட்டியாக பணியாற்றுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.