2017-08-23 16:01:00

சியேரா லியோனில் சுற்றுச்சூழலைக் குறித்த மனமாற்றம் தேவை


ஆக.23,2017. சியேரா லியோன் நாட்டில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இறந்தோருக்காக செபிக்கும் வேளையில், நாட்டில், சுற்றுச்சூழலைக் குறித்த மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று செபிக்கும்படியும் அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 13, 14 ஆகிய நாட்களில் சியேரா லியோனில் நடைபெற்ற பேரிடருக்கு, இயற்கை மட்டும் காரணமல்ல, மனிதர்களின் பேராசையும் ஒரு காரணம் என்று, அந்நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.

காடுகளை அழித்தல், சுற்றுச்சூழலைக் குறித்த கவலை ஏதுமின்றி, சட்ட, திட்டங்களை மீறி, கட்டுமானங்களை மேற்கொள்ளுதல் போன்ற காரணங்களாலேயே இந்தப் பேரழிவு உண்டானது என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' திருமடலில் விடுத்துள்ள எச்சரிக்கைகள், மனமாற்றத்தை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, இதுவரை 600க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், இவர்களில், ஏறத்தாழ 450 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.