2017-08-23 16:12:00

"இந்தப் போர் முரசு போதும்" - நைஜீரிய ஆயர் பேரவை


ஆக.23,2017. "இந்தப் போர் முரசு போதும்" என்ற தலைப்பில், நைஜீரிய ஆயர் பேரவை, மக்களுக்கு விண்ணப்ப மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

1967ம் ஆண்டு, நைஜீரியாவில் துவங்கிய பியாஃப்ரா (Biafra) போரின் 50ம் ஆண்டு நினைவு கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Ignatius Ayau Kaigama அவர்களும், பேரவைச் செயலர், ஆயர் William Amove Avenya அவர்களும் இணைந்து இந்த மடலை வெளியிட்டுள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

பெருமளவு மக்களைக் கொன்றதோடு, பெரும் பொருள் சேதங்களையும் உருவாக்கிய பியாஃப்ரா உள்நாட்டுப் போரின் விளைவுகளை இன்று வரை நாம் உணர்ந்துவருகிறோம் என்று கூறியுள்ள ஆயர்கள், இந்தக் கொடுமை, நமக்குத் தேவையான பாடங்களை, இன்றளவும் சொல்லித்தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

நைஜீரியாவில் நிலவும் பாகுபாடுகளைப் பெரிதுபடுத்தி, உணர்வுகளைத் தூண்டியெழுப்பும் வகையில், ஒருவரை ஒருவர் குறை கூறி வாழ்வதை விடுத்து, ஒப்புரவு, உரையாடல் வழியே நாட்டை முன்னேற்றும் முயற்சிகளில் அனைவரும் இணைந்து வரவேண்டும் என்று ஆயர்களின் மடல் அறிவுறுத்துகிறது.

இதுவரை, எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு வரலாற்றிலும் போர்கள் நன்மைகளை விளைவிக்கவில்லை என்பதை நைஜீரிய  மக்கள் விரைவில் உணர்ந்து, தங்கள் போர் முரசுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.