2017-08-22 14:18:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 34


பள்ளியொன்றில் பணியாற்ற இருவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒருவர், 25 ஆண்டுகளாக ஆசிரியர் பணி செய்பவர். மற்றொருவர், ஆசிரியர் பணிக்கு வந்து மூன்றே ஆண்டுகள் ஆகியிருந்தன. பள்ளி மேலாளர், மூன்றாண்டு அன்பவமுள்ளவருக்கு அந்த வேலையைக் கொடுத்தார். 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தவர், மேலாளரைச் சந்தித்து, "எனக்கு 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. என்னை நீங்கள் ஒதுக்கிவிட்டு, 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் பெற்றவருக்கு எப்படி இந்த வேலையைக் கொடுத்தீர்கள்?" என்று கேட்டார். பள்ளி மேலாளர், அனுபவமிக்க அந்த ஆசிரியரிடம், "25 ஆண்டுகள் அனுபவம் உள்ளதென்று நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். உங்களுக்கு 25 ஆண்டுகள் அனுபவம் கிடையாது. நீங்கள் பெற்றிருப்பது, ஓராண்டு அனுபவம்தான். அதை, நீங்கள் 25 முறை, மீண்டும், மீண்டும் பயன்படுத்தியுள்ளீர்கள்" என்று அமைதியாகக் கூறினார்.

வயதில் முதிர்ந்துவிட்டதால், பல ஆண்டுகள் ஒரு துறையில் பணியாற்றிவருவதால், ஒருவர் ஞானம் பெறுவது கிடையாது. குறிப்பாக, வயது வளர, வளர, ஒரே எண்ணத்தை, ஒரே வழியில் சிந்திக்கும் பழக்கத்தில் சிக்கிக்கொண்டால், அங்கு ஞானம் வளர்வதற்கு வாய்ப்பின்றி போகும்.

யோபு நூல் 32ம் பிரிவில் நமக்கு அறிமுகமாகும் எலிகூ என்ற இளையவர், யோபுக்கும், அவரது மூன்று நண்பர்களுக்கும், வழங்கிய உரையின் துவக்கத்திலேயே, இந்த உண்மையை, உறைக்கும்படி இடித்துரைக்கிறார். யோபும், அவரது நண்பர்களும் பேசியபோது, இடைமறிக்காமல், அதுவரை அமைதி காத்ததற்கு ஒரே காரணம், தான் வயதில் சிறியவன் என்பதும், தனக்குமுன் வாதங்களில் ஈடுபட்டிருந்தோர், வயதில் பெரியவர்கள் என்பதும்தான். ஆனால், வயது மட்டுமே ஒருவருக்கு ஞானத்தை வழங்குவதில்லை; இறைவனின் ஆவி, ஒருவருக்கு உய்த்துணரும் அறிவைத் தரமுடியும் என்பதை உணர்ந்ததால், தான் பேச ஆரம்பித்திருப்பதாக இளையவர் எலிகூ விளக்குகிறார்:

யோபு 32: 6ஆ - 10

நான் வயதில் சிறியவன்; நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்; அஞ்சினேன். நான் நினைத்தேன்; 'முதுமை பேசட்டும்; வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.' ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே, உய்த்துணர்வை அளிக்கின்றது.  வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை; முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை. ஆகையால் நான் சொல்கின்றேன்; எனக்குச் செவி கொடுத்தருள்க! நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

சூடான இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆறு பிரிவுகளில், மிக நீண்ட உரையொன்றை வழங்குகிறார், எலிகூ. 159 இறை வாக்கியங்களாக இடம்பெற்றுள்ள எலிகூவின் உரையில் அடங்கியுள்ள உண்மைகளில் சிலவற்றை, இத்தேடலில் சிந்திக்க முயல்வோம்.

தான் பலமுறை விண்ணப்பித்தும், இறைவன் தனக்கு எவ்வித பதிலும் தரவில்லை என்று யோபு முறையிட்டதற்கு, எலிகூ முதலில் பதில் சொல்கிறார்:

யோபு 33: 13-14

'என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை' என ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?ஏனெனில், இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார்; இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்; அதை யாரும் உணர்வதில்லை.

என்று தன் விளக்கத்தைத் துவக்கும் எலிகூ, இறைவன், கனவில், இரவுக்காட்சியில், மனிதரின் ஆழந்த உறக்கத்தில் அவர்களுடன் பேசுகிறார் என்று கூறுகிறார்.

இறைவன், மனிதர்களோடு, கனவு வழியே தொடர்பு கொள்கிறார் என்பது, ஏறத்தாழ அனைத்து மதங்களுமே ஏற்றுக்கொள்ளும் ஒரு மரபு. இறைவனின் மக்களென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு ஆகியோருக்கு மட்டுமல்ல, கெரார் மன்னன் அபிமெலக்கு (தொடக்க நூல் 20:3), எகிப்து மன்னன் பார்வோன் (தொடக்க நூல் 41:1) ஆகியோருக்கும், இறைவன் கனவில் தோன்றி, எச்சரிக்கைகள் வழங்குவதை, பழைய ஏற்பாட்டில் காண்கிறோம்.

மரியாவின் கணவரான யோசேப்பை, மூன்று கனவுகள் வழியே இறைவன் வழி நடத்தி, முக்கியமான முடிவுகள் எடுக்க அவருக்கு உதவினார் என்பதை மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம் (மத். 1:20; 2:13, 19).

வரப்போகும் நன்மைகளில் பங்கேற்க அழைப்புக்கள், அறிவிப்புகள், அல்லது, எதிர்வரும் தீமைகள் குறித்த எச்சரிக்கைகள் என, இறைவன், மனிதருடன், கனவுகள் வழியே பேசுவதை, விவிலியத்தில் பல இடங்களில் காண்கிறோம்.

நாம் நாள் முழுவதும் நல்லவற்றைச் செய்துவிட்டு, திருப்தியுடன் உறங்கச் சென்றால், அமைதியான, ஆழந்த உறக்கம் வரும். அவ்வேளையில் நமக்குத் தோன்றும் கனவுகளும் ஆழந்த அமைதியைக் கொணரும். ஆனால், நாள் முழுவதும் தீமைகளைத் திட்டமிட்டு செய்தபின் உறங்கச்சென்றால், நமது மனசாட்சி விழித்தெழுந்து, நம்மை உறங்கவிடாமல் செய்துவிடும்.

இந்த நோயைத் தீர்ப்பதற்கு, பலர், தூக்க மாத்திரைகளையும், மதுபானங்களையும், போதைப் பொருள்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவை தரும் செயற்கை மயக்கத்தையும் மீறி, பலர் தங்கள் உறக்கத்தில் அச்சுறுத்தும் கனவுகளைக் கண்டு, துன்புறுகின்றனர். எலிகூவைப் பொருத்தவரை, இறைவன், கனவின் வழியே, நமக்கு எச்சரிக்கை கொடுத்து, நம்மை அழிவிலிருந்து காக்கிறார் என்று கூறுகிறார்:

யோபு நூல் 33: 15-19

கனவில், இரவின் காட்சியில், ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்; படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில், அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்; எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார். இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்; மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார். அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும், உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார். படுக்கையில் படும் வேதனையினாலும் எலும்பில் வரும் தீரா வலியினாலும் அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.

கனவில் வரும் எச்சரிக்கைகளுக்கு செவிகொடாமல் வாழ்வோரைக் காப்பதற்காக, வானதூதர்கள் வரக்கூடும் என்பது, எலிகூ தரும் அடுத்த விளக்கம். 'வானதூதர்கள்' என்ற கருத்து, அனைத்து மதங்களிலும் பல வழிகளில் சொல்லப்பட்டுள்ளது. விவிலியத்தில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், வானதூதர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளதென, விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

வானதூதர்களின் முதன்மையானப் பணி, இறைவன் மனிதர்களுக்குச் சொல்ல விழையும் செய்திகளைத் தாங்கிவரும் தூதர்களாகச் செயலாற்றுவது. இந்தப் பணியின் சிகரமான ஓர் எடுத்துக்காட்டினை, லூக்கா நற்செய்தி முதல் பிரிவில் நாம் காண்கிறோம். (லூக்கா 1: 26-38) இயேசுவின் பிறப்பு குறித்த செய்தியை, அன்னை மரியாவுக்குக் கொணர்ந்த வானதூதர் கபிரியேலை, நற்செய்தியாளர் லூக்கா அறிமுகம் செய்யும் வரிகள் இதோ:

லூக்கா 1:26

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.

இறைவனின் செய்திகளை மக்களுக்குக் கொணர்வதை முக்கியப் பணியாகச் செய்யும் வானதூதர்களின் மற்றொரு பணி, மனிதர்களின் சார்பில் இறைவனிடம் பரிந்துபேசி அவர்களைக் காப்பாற்றுவது. எலிகூ, தன் உரையில் அறிமுகப்படுத்தும் வானதூதரின் செயலை, இவ்வாறு விவரிக்கின்றார்:

யோபு 33: 23-24,26

மனிதர் சார்பாக இருந்து, அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும் ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர் அவர்களின் மீது இரங்கி, "குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்" என்று கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்; அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்; அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.

தவறு செய்வோர் சார்பில் வானதூதர்கள் மன்றாடும்போது, இறைவன் அவர்களை ஏற்றுக்கொள்வார் என்றும், அதைக்கண்டு, வானதூதர்கள் மகிழ்வர் என்றும் இங்கு கூறப்பட்டுள்ள எண்ணம், நமக்கு இயேசுவின் ஓர் உவமையை நினைவுக்குக் கொணர்கிறது. காணாமற்போன நாணயத்தைக் கண்டுபிடித்த பெண், தன் அயலவருடன் மகிழ்கிறார் என்பதைக் கூறும் இயேசு, அந்த உவமையின் இறுதியில் இவ்வாறு கூறியுள்ளார்:

லூக்கா 15: 10

"அவ்வாறே, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்."

இவ்வாறு, கனவின் வழியே, வானதூதர்கள் வழியே இறைவன் மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை 34ம் பிரிவில் விளக்குகிறார் எலிகூ.

அடுத்து, 'தான் நேர்மையானவனாக இருந்தும் இறைவன் தன்னை துன்புறுத்துகிறார்' என்று யோபு கூறும் குற்றச்சாட்டிற்கு, எலிகூ பதில் தருகிறார். அதற்கும் மேலாக, 'தான் பாவம் செய்யாமல் வாழ்வதால் என்ன ஆதாயம்?' (யோபு 35: 3) என்று யோபு எழுப்பும் கேள்விக்கு, எலிகூ பதில்சொல்ல முன்வருகிறார். நேர்மையாளர்கள் பலரது உள்ளங்களில் அவ்வப்போது, அல்லது, அடிக்கடி எழும் கேள்வி: "நேர்மையாக வாழ்வதால் என்ன பயன்?" இந்த முக்கியமான கேள்விக்கு, இளையவர் எலிகூ கூறும் பதிலை, நம் அடுத்தத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.