2017-08-21 16:03:00

கிறிஸ்தவ சபைகளின் முழு ஒன்றிப்பு என்பது இயலக்கூடியதே


ஆக.,21,2017. இத்தாலியில் இடம்பெறும் மெத்தடிஸ்ட் மற்றும் வல்தேசி கிறிஸ்தவ சபைகளின் ஆண்டுக் கூட்டத்திற்கு, திருஅவையின் வாழ்த்துக்களையும் செப உறுதியையும் வழங்கி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தூரின் நகரிலும், உரோம் நகரிலும், அண்மைக்காலங்களில், இக்கிறிஸ்தவ சபைகளுக்கும் தனக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை, அர்ஜென்டினாவில் இடம்பெற்ற சந்திப்புகள் குறித்தும் தான் நினைவுகூர்வதாக தெரிவித்தார்.

லூத்தரன் கிறிஸ்தவ மறுமலர்ச்சி இடம்பெற்றதன் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் பின்னணியில் இடம்பெறும் இந்த ஆண்டுக் கூட்டம், மற்றவர்களையும், இவ்வுலகையும், வரலாற்றையும் புதிய கண்ணோட்டத்தில் உற்று நோக்க உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என விருப்பம் கொள்ளும் இயேசு கிறிஸ்து, நம்மோடு நடந்து நம்மை அரவணைத்துள்ளதன் வழியாக, நாம் ஏற்கனவே சகோதரர்களாகவும் உயிர்துடிப்புடையவர்களாகவும் இருப்பதால், முழு ஒன்றிப்பு என்பது இயலக்கூடியதே எனவும் தன் செய்தியில் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறைகளாலும்,அச்சத்தாலும், கண்ணீராலும், பாராமுகத்தாலும், சுயநலன்களாலும் நிறைந்திருக்கும் இவ்வுலகில், கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து, கிறிஸ்தவ சாட்சியத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.