2017-08-18 15:42:00

பார்சலோனா பயங்கரவாத தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்


ஆக.18,2017. இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், இது, படைத்தவராம் இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் மாபெரும் துரோகம் என்றும் சொல்லி, இத்தாக்குதலுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பார்சலோனா நகரிலுள்ள Las Ramblas என்ற முக்கிய சுற்றுலா தளத்தில், இவ்வியாழனன்று பொதுமக்கள் பெருமளவில் கூடியிருந்தபோது, வாகனம் ஒன்று திடீரென கூட்டத்திற்குள் புகுந்ததில் 13 பேர் பலியாயினர் மற்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மனிதமற்ற முறையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவதற்கு, தொடர்ந்து உறுதியுடன் உழைப்பதற்கு, மக்களுக்கு இறைவன் ஆற்றல் தருவாராக என்று செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

பார்சலோனா பேராயர் கர்தினால் Juan José Omella y Omella அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், திருத்தந்தையின் கண்டனமும், செபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பார்சலோனாவில் நடந்த இத்தாக்குதல் குறித்து, இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய, திருப்பீட செய்தி தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள், பார்சலோனாவில் நடந்த இந்தத் துயரச் செய்தி கேட்டு திருத்தந்தை மிகவும் கவலையடைந்தார் என்றும், இத்தாக்குதலால் கவலையில் ஆழ்ந்துள்ள இஸ்பெயின் நாட்டினர் எல்லாருடனும், குறிப்பாக, இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுடன், திருத்தந்தை தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.