2017-08-17 15:45:00

அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ - பிறப்பு நூற்றாண்டு விழா


ஆக.17,2017. அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், எல் சால்வதோர் நாட்டு எளிய மக்களுக்கு மட்டுமல்லாமல், திருஅவையின் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையின் மறைசாட்சியாக விளங்குகிறார் என்று, சிலே நாட்டு கர்தினால் ஒருவர் மறையுரை வழங்கினார்.

அருளாளர் ரொமேரோ அவர்கள், 1917ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்ததையொட்டி, இவ்வாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, சான் சால்வதோர் பேராலயத்தில் இடம்பெற்ற முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்களில், திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட கர்தினால் ரிக்கார்தோ எஸ்ஸாத்தி அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

பேராயர் ரொமேரோ அவர்களை நண்பராகக் கொண்டிருக்கும் எவரும், இறை மக்களை கட்டியெழுப்பும் பணியில் அர்ப்பண உணர்வுடன் ஈடுபடுவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரொமேரோ அவர்களின் அருளாளர் பட்டமளிப்பு நாளுக்கென அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் கூறியதை, கர்தினால் எஸ்ஸாத்தி அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

1917ம் ஆண்டு பிறந்த ரொமேரோ அவர்கள், தன் 60வது வயதில் சான் சால்வதோர் பேராயராக பணியாற்றுகையில், சமூக நீதிக்கென குரல் கொடுத்ததால், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, திருப்பலி நிறைவேற்றும் வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2015ம் ஆண்டு, மே, 23ம் தேதி, இவர் அருளாளர் என அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.