2017-08-15 14:32:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 33


நடுவராக, நீதிபதியாக அமர்ந்திருக்கவேண்டிய இறைவன் இல்லாமலேயே நடைபெற்றுவரும் ஒரு வழக்கில், நாம் கடந்த சில வாரங்களாகப் பங்கேற்று வருகிறோம். யோபுக்கும், அவரது நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகிய மூவருக்கும் இடையே நிகழ்ந்துவரும் இந்த வழக்கில், தான் குற்றமற்றவர் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, யோபு தன் வாதங்களைக் கோர்வையாகத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று கூறி முடித்த வேளையில், நீதி மன்றத்தில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

பொதுவாக, ஒரு வழக்கறிஞர் கூறும் வாதங்கள் தனக்கு ஏற்புடையதல்ல என்றால், எதிர்தரப்பு வழக்கறிஞர், 'அப்ஜெக்சன் யுவர் ஆனர்' என்று குறுக்கிடுவார். அவரது மறுப்பை நீதிபதி ஏற்றுக்கொண்டால், அவர் தன் மறுப்பு வாதத்தை முன்வைப்பார். இந்த வழக்கிலோ, எதிர்தரப்பில் வாதாடிவந்த யோபின் நண்பர்கள் மூவரும், தங்கள் வாதங்களை நிறுத்திக்கொண்டனர் என்பதை, யோபு நூல் 32ம் பிரிவின் அறிமுக வரிகள் இவ்வாறு கூறுகின்றன:

யோபு 32: 1

யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.

அவ்வேளையில், ஓர் இளையவர், 'அப்ஜெக்சன் யுவர் ஆனர்' என்று நீதிமன்றத்தில் எழுந்து நிற்கிறார். அந்த இளையவர் யார், அவர் ஏன் அவ்வேளையில் குறுக்கிட்டார் என்பதை 32ம் பிரிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

யோபு 32: 2-6

அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான். யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை. எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள். அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான். ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்.

இளையவர் எலிகூவை அறிமுகப்படுத்தும் இவ்விறைவாக்கியங்களில் "சீற்றம் அடைந்தான்; சினம் கொண்டான்; கோபப்பட்டான்; ஆத்திரம் அடைந்தான்" என்று நான்கு முறை கூறப்பட்டுள்ளது. இளையோர் என்றதுமே, பொறுமையின்மை, கோபப்படுதல், வளர்ச்சியற்ற (immature) முறையில் நடந்துகொள்ளுதல், ஆத்திர, அவசரமாகச் செய்தல் என்ற பண்புகளை அவர்கள் மீது சுமத்துகிறோம்.

கோபம் கொண்டு எழுந்த எலிகூவைப்பற்றி சிந்திக்கும்போது, 1950களில் இங்கிலாந்தில் உருவான 'Angry young men' அதாவது, 'கோபமான இளையோர்' என்ற இயக்கம் நம் நினைவுக்கு வருகிறது.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது, இங்கிலாந்து, பொருளாதாரத்திலும், சமுதாய வாழ்விலும் மிகப்பெரும் அளவில் உருக்குலைந்திருந்தது. அத்துடன், இந்தியா உட்பட, பல நாடுகளில் பிரித்தானிய காலனிய ஆதிக்கம் முடிவுற்றிருந்தது. அவ்வேளையில், தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, பிரித்தானிய அரசு எடுத்த பல முடிவுகள், இளைய தலைமுறையினரை ஆத்திரம் அடையச் செய்தது. குறிப்பாக, பாதுகாப்பு என்ற பெயரில், யார் பலசாலி என்ற பந்தயத்தில், போர்க்கருவிகளைக் குவித்துவந்த அரசுகளுடன், பிரித்தானியாவும் இணைந்து, 'ஆயுதப் போட்டியில்' (arms race) ஈடுபட்டிருந்தது, இளையோரை ஆத்திரம் அடையச்செய்தது.

உருக்குலைந்து போயிருந்த, உழைக்கும் வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் சேர்ந்த மக்களின் நலனுக்கு நிதி உதவிகளை ஒதுக்காமல், பாதுகாப்பு என்ற கற்பனைக் காரணத்தை முன்வைத்து, அழிவு ஒன்றையே உருவாக்கும் ஆயுதங்கள் செய்வதில், உலக அரசுகள் காட்டிவந்த ஆர்வம், இளையோரைக் கோபமடையச் செய்தது.

தங்கள் காலனிய ஆதிக்கத்திலிருந்து பல நாடுகள் விடுதலை பெற்ற பின்னரும், பிரித்தானிய அரசு, தான் இன்னும் பல நாடுகளை ஆட்சி செய்வதுபோல் எண்ணி வந்ததை, ஜேம்ஸ் ஆஸ்போர்ன் (James Osborne) என்ற நாடக ஆசிரியர், தன் நாடகங்கள் வழியே அம்பலப்படுத்தினார். 1956ம் ஆண்டு, ஆஸ்போர்ன் அவர்கள், 'Look Back in Anger' அதாவது, 'கோபத்துடன் பின்னோக்கிப் பார்' என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை உருவாக்கினார்.

அதுவரை, இங்கிலாந்தில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள், நடைமுறை வாழ்விலிருந்து மக்களை திசைதிருப்பும் கேளிக்கைகளாக மட்டுமே இருந்தன. ஆஸ்போர்ன் போன்றவர்கள், உருவாக்கிய நாடகங்கள், நடுத்தர வகுப்பினர், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வை, உள்ளது உள்ளபடியே காட்டும் நாடகங்களாக அமைந்தன. உழைப்பாளிகளின் உள்ளத்தில் வெடித்தெழுந்த வேதனைக் கேள்விகள், 'கோபத்துடன் பின்னோக்கிப் பார்' போன்ற நாடகங்களில், மேடையில் ஒலித்தன.

இந்த நாடகத்தின் நாயகன், ஜிம்மி போர்ட்டர் (Jimmy Porter), உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி, ஆலிசன் (Alison), நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர். இவர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், இந்த நாடகத்தில் அரங்கேறின. நாடகத்தில், ஜிம்மி கூறும் ஒரு வசனம், அவர் உள்ளத்தில் புதைந்திருக்கும் கோபத்தையும், அது எவ்விதம் வெளிவரும் என்பதையும் அழகாகக் கூறுகின்றது:

"ஒருநாள் நான், நம் அனைவரைப்பற்றி ஒரு நூலை எழுதுவேன். அந்த நூலில் நான் எழுதப்போகும் எண்ணங்கள், இங்கே, (தன் நெற்றியைத் தொட்டுக் காட்டியபடி) என் சிந்தனையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு மைல் உயரத்திற்குக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பால் எழுதப்பட்டுள்ளன. அவற்றை நான் மீண்டும் வெளியிடும்போது, அமைதியில் திரட்டப்படும் மலர்களைப்போல் அவை வெளிவராது. அவை, நெருப்பாலும், என் இரத்தத்தாலும் எழுதப்படும்."

நாடக ஆசிரியர் ஆஸ்போர்ன் அவர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு ஆத்திரம், நாடக நாயகன் ஜிம்மியின் சொற்களாக வெளிவந்தன. ஆஸ்போர்ன் அவர்களைப்போலவே மேலும் பல எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் தங்கள் ஆத்திரங்களை பல வடிவங்களில் வெளியிட்டதால், 1950களில் 'கோபமான இளையோர்' இயக்கம் உருவானது.

இதே 1950களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவிய கறுப்பின அடக்குமுறைக்கு எதிராக, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்ற இளைய தலைவர்களின் வழிநடத்துதலோடு, உருவாக்கப்பட்ட 'குடியுரிமைகள் இயக்கம்' (Civil Rights Movement) இளையோரின் கோபத்திற்கு ஆக்கப்பூர்வமான வடிகாலாக விளங்கியது.

"நான் கோபமாக இருக்கும்போது, நன்றாக எழுத, செபிக்க, போதிக்க முடிகிறது. ஏனெனில், என் உள்ளுணர்வுகள் அனைத்தும் துரிதமாக்கப்பட்டு, என் அறிவுத்திறன் கூர்மைபெற்று, என் சக்தி முழுவதும் அந்நேரம் வெளியாகிறது" என்று கூறிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள், தன்னுடைய கோபத்தை மட்டுமல்லாமல், பெரும்பான்மையான கறுப்பின மக்களின் கோபத்தையும், ஆக்கப்பூர்வமானச் செயல்களாக மாற்ற அவர்களை வழிநடத்தினார்.

1960களில் நிலவிவந்த இறுக்கமான ஒரு கலாச்சாரத்திற்கு எதிராக, பிரித்தானியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இளையோர் உருவாக்கிய மாற்றுக்கலாச்சாரம், 'ஹிப்பி கலாச்சாரம்' என்று பெயர் பெற்றது.

தன் கண்முன்னே நடக்கும் அநீதிகளையும், அக்கிரமங்களையும் தட்டிக்கேட்கும் வகையில், இளையோர் திரண்டெழுவது, எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் நிகழும் ஒன்று. 'ஜல்லிக்கட்டு தடை'க்கு எதிராக, தமிழ்நாட்டின் பல இடங்களிலும், உலகின் பல நாடுகளிலும், இளையோர் திரண்டெழுந்ததை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த ஒரு போராட்டத்தோடு, இளையோர், தங்கள் சமுதாய ஈடுபாட்டை, நியாயமான ஆவேசத்தை நிறுத்திக்கொண்டது, நம்மை ஏமாற்றமடையச் செய்கிறது. மாட்டுக்காக கூட்டம் போட்ட நாம், ஏன் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக மீண்டும் கூடிவரத் தயங்குகிறோம் என்ற கேள்வி எழுகிறது. சமுதாயத்தில் நல்லவை நடக்க, கோபமுறும் இளையோர் தேவை.

அண்மைய சில மாதங்களாக வெனெசுவேலா நாட்டில் அரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோ அவர்கள் பறிக்க நினைக்கும் குடியரசு உரிமைகளை மீட்க நிகழ்ந்துவரும் போராட்டங்களில், இளையோர் முன்னணியில் உள்ளனர். அவர்களில் பலர் உயிர் துறந்துள்ளனர்.

நல்ல பல குறிக்கோள்களை அடைவதற்கு, இளையோர், தங்கள் கோபத்தை, நல்ல வழிகளில் பயன்படுத்துவது ஒருபுறம் எனில், வேறு சில இளையோர், தங்கள் கோபத்திற்கு வடிகால் தேட, அடிப்படைவாதக் குழுக்களில் இணைவதும், நாம் தற்போது காணும் ஓர் ஆபத்தான போக்கு.

அன்னை மரியாவின் விண்ணேற்பு திருநாளான, ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று, இந்தியா தன் 70வது சுதந்திர நாளைக் கொண்டாடியபோது, காங்கோ குடியரசு, கொரியா, பக்ரெய்ன், உட்பட, இன்னும் சில நாடுகள் தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளன. இந்நாடுகள் அனைத்திலும் வாழும் இளையோர், குறிப்பாக, வட மற்றும் தென் கொரிய நாடுகளில் வாழும் இளையோர், தங்கள் சக்தி மிக்க உணர்வுகளை, நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம். இளையோர் தங்கள் உணர்வுகளை, குறிப்பாக, தங்கள் நியாயமான கோபங்களை, நல்வழியில் பயன்படுத்த, அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம்.

'கோபமுறும் இளைய சமுதாயத்தின்' பிரதிநிதியாக, யோபு நூல் 32ம் பிரிவில் நாம் சந்திக்கும் எலிகூ கூறும் கருத்துக்கள், தொடர்ந்து வரும் ஆறு பிரிவுகளில், மிக நீண்ட உரையாக வழங்கப்பட்டுள்ளன. 159 இறை வாக்கியங்களாக இடம்பெற்றுள்ள எலிகூவின் உரையில் அடங்கியுள்ள உண்மைகள், நம் அடுத்தத் தேடலை வழிநடத்தும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.