2017-08-15 16:05:00

ஒரே பாலின திருமணத்தை எதிர்க்கும் ஆஸ்திரேலிய திருஅவை


ஆக.,15,2017. ஒரே பாலினத் திருமணங்களை அனுமதிப்பதற்கு முயன்றுவரும், ஆஸ்திரேலிய அரசின் முயற்சிகள் குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையையும், எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

ஒரே பாலினத் திருமணங்கள் குறித்து மக்கள் கருத்து வாக்கெடுப்பு எடுப்பது குறித்த தீர்மானத்திற்கு, ஆகஸ்ட் 24ம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், இம்முயற்சிகள் குறித்து தங்கள் கவலையை வெளியிட்ட ஆயர்கள், ஆண்-பெண் பாலினங்களுக்கிடையே உருவாகும் இணைப்பையே திருமணமாக கருதமுடியும் எனக் கூறிவரும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் மாற்றங்கள் கொணரப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

ஒரே பாலினத் திருமணங்களை அனுமதிக்க, மக்கள் முன்வரக் கூடாது என்ற விண்ணப்பத்தையும் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ள ஆயர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக செயல்படவேண்டிய பெற்றோரின் கடமைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரே பாலின ஆர்வமுடையோர் பாகுபாட்டுடன் நடத்தப்படவேண்டும் என தாங்கள் கேட்கவில்லை எனக்கூறும் ஆஸ்திரேலிய ஆயர்கள், குழந்தைகள் தங்கள் இயற்கையான பெற்றோருடன் கொண்டிருக்கும் உறவு குறைத்து மதிப்பிடப்பட முடியாதது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.