2017-08-14 16:47:00

ஒப்புரவு அருளடையாளத்தின் புனிதம் காக்கப்படவேண்டும்


ஆக.,14,2017. பாலியல் முறையில் குழந்தைகளை தவறாக நடத்திய ஒருவர், ஒப்புரவு அருளடையாளத்தின்போது வெளிப்படுத்தியவற்றை சட்டத்தின் முன் வெளிப்படுத்தியாகவேண்டும் என ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்த முயல்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

குழந்தைகளை பாலியல் முறையில் தவறாக நடத்துபவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தில் தங்களிடம் கூறியவற்றை அரசிடம் தெரிவிக்க மறுத்தால், அந்த அருள்பணியாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு  புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர உள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட அந்நாட்டு ஆயர்கள், இதனை எதிர்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர் பேரவைத் தலைவரும், Melbourne பேராயருமான Denis J.Hart அவர்கள், ஒப்புரவு அருளடையாளம் என்பது, ஒருவர் இறைவனுடன், ஓர் அருள்பணியாளர் வழியாகக் கொள்ளும் ஆன்மீக சந்திப்பு மட்டுமல்ல, இது மத சுதந்திரத்தின் அடிப்படை பகுதியாகும் என கூறியுள்ளார். ஆஸ்திரேலிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த உரிமை மதிக்கப்பட வேண்டிய அதேவேளை, இதற்கு வெளியே தெரியவரும் அனைத்து மீறல்களும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படவேண்டும் என மேலும் கூறியுள்ளார் பேராயர் Denis J.Hart.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.