2017-08-10 15:40:00

இயேசுவுக்கு நாம் உயர் மதிப்புள்ளவர்கள் - திருத்தந்தை


ஆக.10,2017. "இயேசு நம்மை தனிமையில் விடுவதில்லை, ஏனெனில், அவருக்கு நாம் உயர் மதிப்புள்ளவர்கள்" என்று சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 10, இவ்வியாழன் இடம்பெற்ற செய்தியில் காணப்பட்டன.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஒவ்வொரு நாளும், ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், ஜெர்மன், பிரெஞ்சு, போர்த்துகீசியம், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகிவருகின்றன.

@pontifex என்ற முகவரியுடன் திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், ஆகஸ்ட் 10ம் தேதி முடிய 1265 என்ற எண்ணிக்கையில் உள்ளன என்பதும், இச்செய்திகளை ஆங்கிலத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 1 கோடியே 21 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

டுவிட்டர் செய்திகளின் தாக்கங்கள் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் Twiplomacy நிறுவனத்தின் கணிப்புப்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளை ஒன்பது மொழிகளில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 3 கோடியே 40 இலட்சத்திற்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இன்று உலகெங்கும், அரசியல் மற்றும் மத தளங்களில் பணியாற்றும் தலைவர்களில் 856 பேர், டுவிட்டர் செய்திகள் வழியே மக்களை தொடர்பு கொண்டுவருகின்றனர் என்றும், இச்செய்திகளை பின்பற்றுவோர் எண்ணிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னணியில் உள்ளார் என்றும் வலைத்தள செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.