2017-08-10 15:54:00

அமைதி வேண்டி, கொரிய மக்கள் செபமாலை செபிக்க அழைப்பு


ஆக.10,2017. வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ள வேளையில், அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி அனைத்து மக்களும் செபிக்கும்படி  கொரிய ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அன்னை மரியா விண்ணேற்புப் பெருவிழா அண்மித்து வருவதையொட்டி, சோல் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கர்களுக்கு, இவ்வுயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் அனுப்பியுள்ள  செய்தியில், செபமாலை முயற்சிகளை மேற்கொள்ளும்படி மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

பாத்திமா நகரில் தோன்றிய அன்னை மரியா, உலகின் மனமாற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், செபமாலையைச் செபிக்கும்படி கூறிய புதுமை நிகழ்வின் 100ம் ஆண்டைக் கொண்டாடும் வேளையில், மீண்டும் அன்னை, இதே அழைப்பை நமக்கும் விடுக்கிறார் என்று கர்தினால் Yeom Soo-jung அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, மரியன்னை விண்ணேற்பு அடைந்த நாளன்று, ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலை அடைந்ததை தன் அறிக்கையில் நினைவுறுத்தும் கர்தினால் Yeom Soo-jung அவர்கள், அன்னை வழங்கிய விடுதலை என்ற கொடையை நாம் தொடர்ந்து அனுபவிக்க, செபமாலை வழியே, இறைவனை வேண்டுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வட கொரியாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நிலவிவரும் இறுக்கமான சூழல் குறைவதற்கு,  மக்கள் செபிக்குமாறு, Daejeon, Uijeongbu, Andong ஆகிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும் அழைப்பு விடுத்துள்ளனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.