2017-08-10 16:19:00

அணு ஆயுத ஒழிப்பு ஒன்றே, உலகை முழுமையாகக் காப்பாற்றும்


ஆக.10,2017. அணு ஆயுத ஒழிப்பு ஒன்றே, இவ்வுலகை அணு ஆயுதத் தாக்குதலிலிருந்து முழுமையாகக் காப்பாற்றும் என்றும், இத்தகைய நிலையை அடைய கிறிஸ்தவர்களாகிய நாம் அமைதியின் பாதையில் உறுதியுடன் வழிநடக்க வேண்டும் என்றும் திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் முன்னாள் பிரதிநிதியாகவும், தற்போது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் செயலராகவும் பணியாற்றும், பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், வட கொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நிலவிவரும் இறுக்கமான சூழலைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

விட்டுக்கொடுக்க மனமில்லாத உலகத் தலைவர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துவது, ஐ.நா. அவையின் மிகக் கடினமான பணி என்று குறிப்பிட்ட பேராயர் தொமாசி அவர்கள், வட கொரியா விடுத்து வரும் அச்சுறுத்தல்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு விடுத்துவரும் பதில்மொழிகள், உலக நாடுகளை மேலும் கவலையுறச் செய்கின்றன என்று குறிப்பிட்டார்.

இராணுவத் தொடர்புடைய இடங்களைத் தாக்குவதாகக் கூறி, 1945ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகியில் நடைபெற்ற தாக்குதல்களில், பொதுமக்கள், ஆயிரக்கணக்கில் இறந்தனர் என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி அவர்கள், இன்றும், அதே காரணத்தைக் கூறி, அரசுகள் மேற்கொள்ளும் தாக்குதல்களில், பெருமளவு உயிரிழப்பது, அப்பாவி மக்களே என்று எடுத்துரைத்தார்.

அணு ஆயுதத்தை முற்றிலும் அழிக்க 123 நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருந்தாலும், முக்கியமான ஒரு சில நாடுகள், அணு ஆயுதங்களை பாதுகாத்து வருவது இவ்வுலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கின்றது என்று, பேராயர் தொமாசி தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.