2017-08-09 16:38:00

பிரான்ஸில் 'பசுமைத் திருஅவை' முயற்சியைத் துவங்க திட்டம்


ஆக.09,2017. உலகின் வளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போக்கைத் தடுக்கும் ஒரு முயற்சியில், பிரான்ஸ் நாட்டின் ஆயர் பேரவை, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிறிஸ்தவ சபையினர் அனைவரும் இணைந்து, 'பசுமைத் திருஅவை' என்ற முயற்சியைத் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

நமது உலகம் ஓராண்டு முழுவதும் உருவாக்கக்கூடிய சக்திக்கு மேலாக, ஆகஸ்ட் 2ம் தேதி, நாம் சக்தியை பயன்படுத்திவிட்டோம் என்பதையும், இதே அளவில் நாம் சக்தியை பயன்படுத்தினால், இவ்வாண்டு நமக்கு 1.7 என்ற அளவு உலகம் நமக்குத் தேவைப்படும் என்பதையும் கூற, ஆகஸ்ட் 2ம் தேதி Earth Overshoot Day, அதாவது, பூமி இலக்கைத் தாண்டிய நாள் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நாளைத் தொடர்ந்து, கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிறிஸ்தவ சபைகள் ஒருங்கிணைந்து, 'பசுமைத் திருஅவை' முயற்சியை, ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் உலகநாளான செப்டம்பர் 16ம் தேதி முதல் கடைபிடிக்க முடிவு செய்துள்ளன.

எரிபொருளை குறைவாகப் பயன்படுத்துதல், சக்திகளையும், பொருள்களையும் பிறரோடு பகிர்ந்துகொள்ளுதல், கார்பன் வெளியீட்டை குறைத்தல் என்ற பல வழிகளில் மக்கள் முயற்சிகளை மேற்கொள்வதற்கு 'பசுமைத் திருஅவை' செயல்திட்டங்களை வகுத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் உற்பத்தி செய்யும் இயற்கை சக்தியின் அளவைக் காட்டிலும் கூடுதல் சக்தியை, 1997ம் ஆண்டு முதல் நாம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்றும், தற்போது நாம் பயன்படுத்தும் சக்தியை உருவாக்க, நமக்கு 1.7 என்ற அளவில் உலகம் தேவைப்படும் என்றும், இந்தக் கூடுதல் பயன்பாட்டின் விளைவாகவே நாம், காடுகளின் அழிவு, வறட்சி, வெள்ளம், நில அரிப்பு, என்ற பல இயற்கைச் சீரழிவுகளை சந்தித்துவருகிறோம் என்றும், அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.