2017-08-09 15:16:00

பாசமுள்ள பார்வையில்.. மேடையில் மட்டும்தான் அன்பா?


அன்று ஆகாஷ் அன்பைப் பற்றி, நகைச்சுவை கலந்து மேடையில் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் கேட்ட பார்வையாளர்கள், அரங்கமே அதிரும்படி கைதட்டிக் கொண்டிருந்தார்கள். பார்வையாளர்களின் கைதட்டல் தந்த உற்சாகத்தில் ஆகாஷுக்கு, அவரையும் அறியாமல் கருத்துக்கள் ஊற்றெடுத்துவர, சிறப்பாக உரையாற்றி முடித்தார். கூட்டம் முடிந்ததும், அரங்கத்தில் பலர் ஆகாஷிடம் வந்து கைகுலுக்கி வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். கூட்டத்திலிருந்து, முதியவர் ஒருவர் ஆகாஷிடம் வந்தார். “தம்பி, நீங்க நல்லாப் பேசினீங்க. அன்பைப் பற்றி எவ்வளவு அழகாச் சொன்னீங்க. சுயநலம் பெருகிவிட்ட இந்தக் காலத்துல உங்களை மாதிரி அன்பைப் பற்றி எடுத்துச் சொன்னாதான் மத்தவங்களுக்குப் புரியும்..” என்று சொல்லிப் பாராட்டினார். பின் ஆகாஷ் அவரிடம், ஐயாவுக்கு எந்த ஊர்? என் சொற்பொழிவை இதற்கு முன்னாள் கேட்டிருக்கீறிர்களா?” எனக் கேட்டார். “இல்லை தம்பி.. நான் வெளியூர். வரன் பார்க்கிற விஷயமா இங்கே வந்தேன். எங்க ஊருக்கு ராத்திரிதான் பஸ். அதுவரைக்கும் நேரம் போகணுமேன்னு இங்கே வந்தேன்!” என்று சொன்னார் முதியவர். ஐயா, உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீர்களா?”எனக் கேட்டார் ஆகாஷ். என் பொண்ணுன்னே வெச்சுக்கோங்களேன். என் அண்ணன் பொண்ணு. அண்ணன் சின்ன வயசுலயே விபத்துல போய்ட்டார். அவரோட ரெண்டு பொண்ணுக, ஒரு பையன் எல்லாரையும் நான்தான் வளர்த்தேன். எல்லாரையும் படிக்கவெச்சு ஆளாக்கி, ரெண்டுபேருக்கு கல்யாணமும் பண்ணி வெச்சுட்டேன். கடைசிப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டிருக்கேன். மாப்பிள்ளை பையன் இந்த ஊர்லதான் டீச்சரா இருக்கார்னு தெரிஞ்சு பார்த்துட்டுப்போக வந்தேன். இனிதான் என் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யணும்”என்று பெரியவர் சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல, சுருக்கென்று இருந்தது ஆகாஷுக்கு. அண்ணன் பிள்ளைகளை, தன் பிள்ளைகளாய் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பெரியவர் எங்கே? சொந்த அம்மாவை என்னுடன் வைத்திருந்தால் சுதந்திரம் இருக்காது என்று, என்னைவிட வசதியற்ற தம்பியின் வீட்டுக்கு அனுப்பிவிட்ட நான் எங்கே? அன்பு என்பது மேடையில் பேசுவதற்கு மட்டும்தானா? அது வாழ்க்கையில் நாம் காட்ட வேண்டிய உணர்வு அல்லவா?’ இவ்வாறு சிந்தித்த ஆகாஷ், வயது முதிர்ந்த தன் அம்மாவைத் தன்னுடன் அழைத்துவரத் தீர்மானித்தார். மறுநாளே அம்மாவை அழைத்துவந்ததோடு, மேடையில் அன்பு பற்றிப் பேசுவதைக் குறைத்துவிட்டு, பொதுச்சேவையில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.