2017-08-09 15:25:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம் பாகம் 5


ஆக.09,2017. கி.பி. 363ம் ஆண்டுக்கும், கி.பி.364ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், எட்டு மாதங்களே ஆட்சி செய்த உரோமைப் பேரரசர் ஜோவியன், கிறிஸ்தவத்தை, அரசின் மதமாக மீண்டும் அறிவித்தார். பேரரசின் சில பகுதிகளை விட்டுக்கொடுத்து, பெர்சியர்களோடு சமாதானம் செய்துகொண்டார். இவருக்குப் பின், உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை ஆட்சிசெய்த முதலாம் வலன்டினியனும் (கி.பி.364-375) கிழக்குப் பகுதியை ஆட்சி செய்த வலன்டினியனின் சகோதரரான வாலன்சும் (கி.பி.364-378) ஜோவியனின் கொள்கையையே பின்பற்றினர். இவ்விருவரும் கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக இருந்தனர். அக்காலத்தில் உரோமைப் பேரரசின் டான்யூப், ரைன் பகுதி எல்லைகள், தொடர்ந்து அச்சுறுத்தலிலே இருந்து வந்தன. இந்த அச்சுறுத்தல், அண்டை நாட்டுப் பேரரசர்களின் அச்சுறுத்தல் போலன்றி, சற்று வித்தியாசமானதாக இருந்தது. Huns இனத்தவரால், காட்டுமிராண்டித்தனம் கொண்ட பழங்குடியினர் அச்சுறுத்தப்பட்டனர். Huns எனப்படுபவர், கிழக்கு ஐரோப்பா, Caucasus மற்றும், மத்திய ஆசியாவில், கி.பி.4ம் நூற்றாண்டுக்கும், கி.பி. 7ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த நாடோடி இனத்தவர். இந்த இனத்தவரின் மிரட்டலுக்கு அஞ்சி, அவர்களின் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினர், உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியில் குவியத் தொடங்கினர். கி.பி. 378ம் ஆண்டில், ஏட்ரியன்நோபிள் என்ற இடத்தில், Visigoths  இனத்தவரால், பேரரசர் வாலன்ஸ் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது, பழங்குடி இனத்தவர் பிரச்சனை தொடங்கியது. ஆயினும், பேரரசர் வாலன்ஸ்க்கு அடுத்து பதவிக்குவந்த தெயோதோசியுஸ், குறைந்த காலத்திலேயே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார். Visigoths  இனத்தவரை, தனது பேரரசுக்குள் கூட்டாட்சி அமைக்கும்படிச் செய்து பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். ஆயினும், Goths, Vandals, Huns ஆகிய இனத்தவரின் ஊடுருவலால், உரோமைப் பேரரசு தொந்தரவு செய்யப்பட்டது. மேற்கில், உரோமைப் பேரரசு அழியவும் இது காரணமானது.

பேரரசர் தெயோதோசியுஸ், கி.பி. 379ம் ஆண்டில், உரோமைப் பேரரசரானார். இவர் ஆட்சிக்குவந்த சில காலத்திலேயே, தனது பேரரசில் அந்நியக் கடவுள் வழிபாட்டையும், கிறிஸ்தவத்திற்கெதிரான ஆரியத் தப்பறைக் கொள்கை போன்ற தப்பறைகளையும் சட்டத்திற்குப் புறம்பாக்கினார். சட்டப்படி தடையும் செய்தார். கி.பி.325ம் ஆண்டில், பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் நடைபெற்ற நீசே பொதுச் சங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவக் கோட்பாடுகளை, அனைத்துக் குடிமக்களும் ஏற்க வேண்டுமென்று சட்டம் இயற்றினார். திருஅவைக்கும், அரசுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தி, மதத்தை அரசு வழிநடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். இம்முறையே, கிழக்கத்திய உரோமைப் பேரரசின் அல்லது பைசான்டைன் பேரரசின் பண்பாக மாறியது. ஆயினும், மேற்கில் பணியாற்றிய ஆயர்கள், தங்களின் சொந்த சர்வாதிகாரக் கருத்துக்களைக் கொண்டிருந்ததைக் கண்டார் தெயோதோசியுஸ். மேற்குத் திருஅவையில், இப்படி உயர்ந்த நிலையில் இருந்தவர் இத்தாலியின் மிலான் ஆயர் புனித அம்புரோஸ். இவர், மேற்கத்திய திருஅவை, அரசு அதிகாரங்களோடு உள்ள உறவில், உயர் நிலையில் இருக்கச் செய்தவர்.

அக்காலத்தில் கிரேக்க, உரோமைய மற்றும் பைசான்டைன் விளையாட்டுக்களில், குதிரை இரதப் பந்தயங்கள் மிகவும் கிளர்ச்சியூட்டுபவைகளாகவும், அதேநேரம், குற்றவாளிகளைக் கொலை செய்வதற்குரிய கேளிக்கை விளையாட்டாகவும் இருந்தன. குற்றவாளிகள், பந்தய இரதங்களால் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உரோமைப் பேரரசில், குதிரை இரதப் பந்தயங்கள் மிகவும் பிரபலமானவையும்கூட. பேரரசர்கள், சிறந்த இரத ஓட்டுனர்களுக்கு, இலட்சக்கணக்கில் வெகுமதி அளித்தனர். பேரரசர் Caligula என்பவர், ஒரு வீரருக்கு இருபது இலட்சம் உரோமை வெள்ளி நாணயங்களை (sesterces) கொடுத்தார் எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்கு, குறைந்த கட்டணம் முப்பது பவுண்டுகளாகும். இக்காலத்தில், கிரிக்கெட், கால்பந்து மற்றும் திரைப்படங்களில் போற்றப்படும் நாயகர்கள் போன்று, அக்காலத்தில், இரதப் பந்தய ஓட்டுனர்களும், சமூகத்தில் நாயகர்களாகப் போற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி.390ம் ஆண்டில், பேரரசர் தெயோதோசியுஸ், மிலானில் இருந்தபோது, கிரீசில் பிரபல குதிரைப் பந்தய இரதம் ஓட்டுனர் ஒருவரின் ஆதரவாளர்களால் கிளர்ச்சி கிளம்பியது. நகர ஆளுனர் கொல்லப்பட்டார். எனவே, அக்கிளர்ச்சியை கடுமையாக அடக்குவதற்கு உத்தரவிட்டார், பேரரசர் தியோடோசியுஸ். இரத ஓட்டுனரின் இரசிகர்கள், ஒரு சிறப்பு நிகழ்வுக்காக, கேளிக்கை அரங்கிற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு வந்தபின் அரங்கின் கதவுகள் மூடப்பட்டன. பின், தெயோதோசியுசின் படைகள், மூன்று மணி நேரத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வெட்டிக் கொலை செய்தன. இந்தச் செய்தி மிலான் ஆயர் அம்புரோஸ் அவர்களுக்கு எட்டியபோது, ஆயர் அவர்கள், பேரரசர் தெயோதோசியுசுக்கு திருநற்கருணை வழங்க மறுத்துவிட்டார். பேரரசர், இந்தக் குற்றத்திற்குப் பொதுப்படையாக, தவம் செய்ய வேண்டும் என்றார் ஆயர் அம்புரோஸ். பேரரசர் தெயோதோசியுஸ், முதலில் ஆலயத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். பின், தனது தலையை மழித்து, பேரரசருக்குரிய ஆடைகளைக் களைந்து, சாக்கு உடை உடுத்தி பொதுவில் தோன்றினார். ஆயர் அம்புரோஸ் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை, பேரரசர் தெயோதோசியுஸ் இவ்வாறு பலமுறை தவ உடைகளை அணிந்து பொதுவில் வந்தார். பின்னரே ஆயர், கிறிஸ்மஸ் நாளன்று, பேரரசர் தெயோதோசியுசுக்கு திருநற்கருணை வழங்கினார். பேரரசர்கள் குற்றமிழைக்கையில், அவர்களை திருஅவையிலிருந்து விலக்கி வைப்பதாக, மேற்கத்திய திருஅவை அச்சுறுத்தி வந்துள்ளது.   

பேரரசர் தெயோதோசியுஸ், முதலாம் தெயோதோசியுஸ், மகா தெயோதோசியுஸ் (Theodosius I, Theodosius the Great), எனவும் அழைக்கப்படுகிறார். கி.பி.379ம் ஆண்டிலிருந்து 395ம் ஆண்டுவரை ஆட்சி செய்த இவரே, உரோமைப் பேரரசின் கிழக்கையும், மேற்கையும் ஆட்சி செய்த கடைசிப் பேரரசராவார். இவரது ஆட்சி காலத்தில், அந்நிய மதத்தைத் தடை செய்தார். Delphiயில் பிரபல அப்பெல்லோ கோவில், அலெக்சாந்திரியாவில், Serapeum கோவில் உட்பட, அந்நியக் கடவுள் விழாக்களையும், அவற்றுக்குப் பலியிடுவதையும் தடை செய்தார். பழங்கால கிரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் கடவுள் வழிபாட்டை, கி.பி.393ம் ஆண்டில் இவர் தடை செய்தார். கி.பி. 395ம் ஆண்டில், இவர் இறந்தார். இவருக்குப் பின் உரோமைப் பேரரசு இணைக்கப்படவேயில்லை வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.